மதுரை;
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் எழுந்த ஆட்சி அதிகாரப் போட்டி காரணமாக, ஆளும் அதிமுக இரண்டாக உடைந்தது. இதனால் அதிமுக என்ற கட்சிப் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. அவற்றை மீட்பதற்கு, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி ஆகிய இரண்டு அணிகளும், கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன. எனினும் அதன்மீது முடிவுகள் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தி இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது பெரும்பான்மையானோர் இருந்த பிரிவுக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது; இந்த முறையை பின்பற்றி அதிமுகவிலும் அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு காலமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பதில் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply