===அறிவுக்கடல்===
1945 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ரிச்மாண்ட் கடற்படை விமானத் தளத்தில் 366 விமானங்கள் ஒரு சூறாவளியில் முற்றிலுமாக அழிந்தன. செப்.12 அன்று லீவார்ட் தீவுகளில் உருவான ‘1945 ஹோம்ஸ்டெட் சூறாவளி’ என்று குறிப்பிடப்படும் இது, டர்க்ஸ்-கேய்காஸ் தீவுகள், பகாமாஸ், ப்ளோரிடா, ஜார்ஜியா, கரோலினா ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, செப்.20 அன்று நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் வலுவிழந்து மறைந்தது.
செப்.15 அன்று இந்த விமானத் தளத்தைத் தாக்கியபோது ஏற்பட்ட தீ, 240 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் வேகமாகப் பரவியது. விமானங்களை நிறுத்தி வைக்கும் ஹங்கர் என்னும் 3 கொட்டகைகள், விமானத் தளத்தோடு இணைந்த குடியிருப்புக்கள் உட்பட அனைத்தும் நாசமாயின. 366 விமானங்கள், 25 வெப்பக்காற்று பலூன் வேவு விமானங்கள், 150 கார்கள் ஆகியவை முற்றிலுமாக அழிந்தன. தப்பிய விமானங்கள் இலைகளைப் போலத் தூக்கிவீசப்பட்டன.
புளோரிடா மாநிலத்தில் மட்டும் 1632 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன; 5372 வீடுகள் சேதமடைந்தன. இது, வடக்கு கரோலினாவில் 380 மி.மீ. அளவுக்கு மிகப்பெரும் மழைப்பொழிவையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கேப் பியர் நதியை ஒட்டிய பகுதிகளில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது. ஹோம்ஸ்டெட் நகர் முழுவதும் முதல்மாடி அளவுக்குத் தண்ணீரில் மூழ்கியது.
கிராண்ட் டர்க் தீவின் முக்கால்பாக கட்டிடங்கள் இடிந்து போயின. இப்புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் 26 தான் எனினும், அக்காலத்திய மதிப்பில் 60 மில்லியன் டாலர்களுக்கு பொருளிழப்பு ஏற்பட்டது. உண்மையில் இச்சூறாவளி முதலில் செப்.12 அன்று கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்ப்யூட தீவில் உருவானபோது, காற்றின் வேகம் 380 கி.மீ. ஆக இருந்தது. அதே வேகத்தில் இது தொடர்ந்திருந்தால், சேதம் இன்னும் பலமடங்கு இருந்திருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.