திருப்பூர், செப்.14 –
திருப்பூரில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அரசு வேலை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஜானகி. இவர் வியாழனன்று அரசு வேலை கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- எனக்கு 31வயது ஆகிறது. 10-ம் வகுப்பு முடித்துள்ளேன். வெள்ளகோவில் அருகே உள்ள கல்லாங்காட்டுவலசு கிராமம் தான், எனது சொந்த ஊர். திருமணமான நிலையில், திடீரென கணவர் பிரிந்து சென்று விட்டார். தற்போது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகிறேன். ஆகவே, எனது நிலையை மேம்படுத்த அரசு வேலை கேட்டு பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளும் வீட்டில் வந்து விசாரித்தனர். பலமுறை மனு அளித்தும், அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை. என் படிப்புக்கு ஏற்ற ஏதாவது ஒரு அரசு வேலையை வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.ஜெகதீசன், ஜானகியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மாதாந்திர மாற்றுத்திறனாளி உதவித் தொகையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கியில் போதிய கடன் உதவி செய்து தர தயாராக உள்ளோம். ஆனால், அரசு வேலை உடனடியாக வழங்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றார். எனினும் தொடர்ந்து முறையிட்டதை அடுத்து அரசு அலுவலர், காவலர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: