தமிழக அரசின் மெத்தனத்தால் 8ஆவது நாளாக தொடரும் ஜோக்டோ ஜியோ போராட்டம் தொடர்கிறது.

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையினைப் பெற்று, அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

மாநில அரசின் 8ஆவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அமுல்படுத்திட வேண்டும், ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணத்தினை உடனடியாக அறிவித்திட வேண்டும், சிறப்புக் கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 7ஆம் தேதியில் இருந்து 8 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான புதனன்று பல மாவட்டங்களில் அமைதியாக அரசு அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இரவில் விடுவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு 2ஆவது நாளாக  போராடி வருகிறார்கள். கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக கைது, ஒலி பெருக்கி அமைக்க அனுமதி மறுப்பு போன்ற அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது. அரசின் மெத்தனப் போக்கால் அரசுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply