நேற்றைய தமிழ் சினிமாவின் தடம்பதித்த கதை – வசன எழுத்தாளர் ஆர்.கே.சண்முகம் தனது 87 வது வயதில் மாரடைப்பால் காலமானார். இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் செல்லப் பிள்ளையாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்து, எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வசனகர்த்தாவாக அறியப்பட்டவர் அவர். அவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.

அந்நாளின் சிவாஜி, எம்ஜிஆர் படங்களின் வசனமழைக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் ஆர்.கே. சண்முகம். சிவாஜியின் மிகமுக்கியமான படங்களான கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் முதலான பல படங்களுக்கு நல்ல தமிழில் மனதைக் கொள்ளை கொள்ளுமளவுக்கு வசனங்களை மழையெனப் பொழிய வைத்தவர் சண்முகம். துவக்கத்தில் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவிடம் உதவி இயக்குநராக திரைத்துறையில் நுழைந்த சண்முகம் 15 ஆண்டுகள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்த அவர் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனமெழுத அழைக்கப்பட்டபோது துவக்கத்தில் எம்.ஜி.ஆருக்குத் தன்மேல் இருந்த தயக்கத்தை உடைப்பதுபோல வசனமெழுதித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

“தோல்வியை அறியாதவன் நான்…” – என்று கூறும் வில்லன் நம்பியாரிடம் “தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்” என்று எம்.ஜி.ஆருக்கு அன்றே பஞ்ச் டயலாக்கை உருவாக்கித்தந்தார் சண்முகம். இன்னொரு வசனம் இப்படி அமைந்தது. நம்பியார் கேட்பார் இப்படி: “மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?” அதற்கு எம்.ஜி.ஆரின் பதில்: “சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!”  ஆயிரத்தில் ஒருவன் கதையை இரண்டு மாதங்களாக பந்துலுவுடன் விவாதித்தார் சண்முகம். அதன்பிறகு, அதற்கு வசனமெழுதி முடிக்க மூன்று மாதங்கள் பிடித்தனவாம். எம்.ஜி.ஆர். இந்தப் படத்தின் வசனங்களைச் சாகாவரம் பெற்றவை என்று மெய் சிலிர்த்துச் சொன்னதாக சண்முகமே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆரின் வருகையை சண்முகம் பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தாராம். அப்போதுவரை அந்தப் படத்திற்குப் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்புத் தளத்திற்குள் வந்ததும் பந்துலுவிடம் சண்முகம் இந்தப் படத்திற்கு வசனமெழுதுவதில் எம்.ஜி.ஆர். தனது முழு திருப்தியை வெளிப்படுத்தினாராம். அப்போது சண்முகத்திடம் படத்திற்கு ஒரு பெயர் சொல்லுமாறு பந்துலு கேட்க, பெரும் மகிழ்ச்சி மனநிலையிலிருந்த அவர் எம்.ஜி.ஆரின் தனித்துவத்தை உணர்ந்தவராக, “ஆயிரத்தில் ஒருவன்” என்று படத்தின் பெயரைச் சொல்ல, அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.

பந்துலு தயாரித்து, இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏற்பட்ட பந்தம் சண்முகத்துக்கு எம்.ஜி.ஆருடன் மிகநீண்ட காலத்துக்குத் தொடர்ந்தது. ஆயிரத்தில் ஒருவன் படம் மிகப்பெரும் வெற்றிக்கனியைப் பறிக்க ஆர்.கே.சண்முகத்தின் கொஞ்சுதமிழ் வசனத்திற்கும் பெரும்பங்கிருந்தது. அப்போதே நூறு நாட்களைத் தாண்டிய அந்தப் படம் 2014ல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுபடியும் ஒரு சுற்று வந்தது. ஆயிரத்தில் ஒருவனைத் தொடர்ந்து நாடோடி, முகராசி, ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்ளே, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழவேண்டும், பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன் என்று 15 படங்களுக்குமேல் எம்.ஜி.ஆருடனான சண்முகத்தின் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வலம்வந்தது. எம்.ஜி.ஆரின் பாடல்களைப்போல அவரது வசனங்களும் சண்முகத்தின் கைவண்ணத்தால் மக்கள் பிரச்சனைகளை, சமூக முன்னேற்றத்தை, அநீதிக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தி நின்றன. எம்.ஜி.ஆரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தன.

தமிழ்த் திரை உலகில் அந்நாளைய உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர். – சிவாஜி ஆகியோருக்கு அவரவரது பாத்திரப் படைப்புகளின் தன்மைக்கேற்ப வசனமெழுதினாலும் அவரது எழுத்தில் தமிழ் தனக்கென ஒரு கம்பீர இடத்தைப் பெற்றிருந்தது. அதுவே ஆர்.கே.சண்முகத்தின் வசனங்களின் தனித்தன்மைக்குச் சாகாவரமும் தந்தது.

Leave A Reply

%d bloggers like this: