லக்னோ,

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட யோகி ஆதித்யாநாத் , பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.மேலும் கடந்த பிப்ரவரி மாதம் கன்னோஜ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து , மாநில முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யாநாத் , தேர்தல் வாக்குறுதியின் படி, 86 லட்சம் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதற்கு ரூ.36000 கோடி செலவாகும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து முதல்கட்டமாக திங்களன்று சுமார் 7000 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஹமிர்பூர் என்னும் ஊரில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்னு கோரி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கினார். அதில் ரூ.5, ரூ.10 கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்ததை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஈஸ்வர் தியால் என்ற விவசாயிக்கு ரூ.19 பைசா, ராம்நாத் என்பவருக்கு ரூ.1.79, முன்னிலால் என்பவருக்கு ரூ.2 , சாந்திமாதேவி என்ற விவசாயிக்கு அவர் பெற்றிருந்த ரூ.1.5 லட்சம் கடனில் ரூ.10.37 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகார பூர்வ தகவல் படி , சுமார் 250 விவசாயிகளுக்கு ரூ.100-க்கும் குறைவான தொகையும் , 200 விவசாயிகளுக்கு ரூ.1000-க்கும் குறைவாகவே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் அமைச்சரிடம் புகார் அளித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் விதிமுறைப்படியே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் அச்சடிக்கும் போது தவறு நடந்திருக்கும் என கூறியுள்ளார். இந்த கடன் தள்ளுபடி பட்டியலின் புகைப்படம் டிவிட்டர் போன்ற சமூக வளைதளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்து அமைச்சர் மன்னு கோரியிடம் கேட்ட போது, நானும் அந்த பதிவுகளை பார்த்தேன். ஏதேனும் தவறு நடந்திருந்தால், அது தொடர்பாக விசாரித்து உடனடியாக சரி செய்வோம். மேலும் இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றார்.

மாநில விவசாயத்துறை அமைச்சர் சூரிய பிரதாப் ஷாஹி கூறுகையில், அரசு என்ன வாக்குறுதி கொடுத்ததோ அதை தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சில விவசாயிகளுக்கு கடன் தொகையே ரூ.100 மற்றும் அதற்கு குறைவாக தான் இருக்கிறது.அவர்களின் கடனை தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்குவதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது ? அவர்கள் வாங்கின கடனை நாங்கள் கூட்டவோ குறைக்கவோ முடியாது. ஒரு சிலருக்கு ரூ.90,000 கூட கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply