ஜெய்பூர்,

பயிர் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர்ந்து இன்று 12 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் பயிர் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துதல் , காப்பீட்டு பணம் செலுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் 12 ஆம் நாளான இன்று சிகார் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளை மறித்தும் மேலும் சுமார் 250 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெய்பூர் – சிகார் சாலையில் உள்ள விவசாய உற்பத்தி சந்தையின் முன்பாகவும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிகார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 கி.மீ., சுற்றளவிற்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜு-யின் நிர்வாக அதிகாரிகள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை புதனன்று மதியம் 1 மணியளவில் நடைபெற உள்ளது.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள், கடன் தள்ளுபடி உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் அரசு ஏற்க மறுத்தால் எங்களது போராட்டம் தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துவருமான அமரா ராம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply