பெரணமல்லூர் சேகரன் 
மாசேதுங், சூஎன்லாய் தலைமையில் செம்படையின் பிரதான பிரிவுகள் 85,000 வீரர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் 15,000 பேர் சியாங்ஸி மாகாண முற்றுகையிலிருந்து துணிந்து வெளியேறி வடமேற்கே 3000 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ஜெசுவான் பிரதேசத்தை நோக்கிப் பகலிலும், அதிகமாக இரவு நேரத்திலும் மழை, இடி, மின்னல், வெயில் என்று பாராமல் ஓராண்டு நடைபயணத்தை மேற்கொண்டனர். ஆண்டு முழுவதும் நாளொன்றுக்கு நடந்த தூரம் 26 மைல்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் ஈடில்லா புரட்சியாளர் களின் வரிசையில் லெனினைப் போலவே, மாசேதுங்கும் சிறப்பான இடம் பெறுகிறார்.சீனாவின் பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் இணைந்து பிணைந்து வளர்ந்த மாமனிதர் மாசேதுங். அவர் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் 1893, டிசம்பர் 26ஆம் நாள் ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஏழு வயதிலேயே மாசேதுங் வயலில் வேலை செய்யத் தொடங்கினார்.எட்டாவது வயதில் படிக்கத் தொடங்கி, பதிமூன்றாவது வயதில் பள்ளியை விட்டு விலகி மீண்டும் விவசாயத்திற்கே திரும்பினார். 

1840-இல் நடந்த அபின் யுத்தம், 1850 முதல் 1864 வரை நடைபெற்ற கலகங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மாவோ கற்றறிந்தார். விவசாயப் பெருங்குடி மக்கள் லட்சோப லட்சம் பேர் இந்த கலகங்களில் எல்லாம் பங்கேற்றது மாவோவின் ஆர்வத்தைத் தூண்டி
யது. பதினேழாவது வயதில் ஒரு மத்தியதரப் பள்ளியில் சேர்ந்தார். அப்போது டார்வின், ஜேம்ஸ் மில், ரூசோ ஆகியோரது நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. ஒரு சக மாணவரிடமிருந்து கிடைத்த உலகத்து வீரர்களும் மேதைகளும் என்ற நூல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டதால், மாவோ அந்த நூலிலிருந்து வாஷிங்டன், நெப்போலியன், பீட்டர் தி கிரேட், மகாராணிகேத்தரைன், வெலிங்டன், கிளாட்ஸ்டன், ரூசோ, மான்ட்டெஸ்க்யூ, ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டார்.1911-ஆம் ஆண்டு டாக்டர் சன்யாட்சென் தலைமையில் மன்னர் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகப் புரட்சி நடைபெற்று, மன்னராட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது.

அப்போது எழுபத்தி இரண்டு புரட்சி வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி மக்களிடையே உணர்ச்சிப் பிரவாகத்தை ஏற்படுத்தியது. ஒருநாள் மாசேதுங் படித்து வந்த பள்ளியில் ஒரு புரட்சியாளர் மாணவர் கூட்டம் ஒன்றை நடத்தி உணர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் உரையாற்றினார். மன்னராட்சியைத் தகர்த்து, குடியரசு அமைக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

இந்த உணர்ச்சியூட்டும் உரைதான் மாசேதுங் புரட்சிப் படையில் சேருவதற்கு காரணமாயிற்று. சரித்திரம், பூகோளம், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை மாவோ மிகவும் விரும்பிப்படித்தார். சார்லஸ் டார்வினின் உயிர்களின் தோற்றம், தாமஸ் ஹக்ஸ்லியின் பரிணாம வாதமும் அறநெறிகளும் ஜ.எஸ்.மில்லின் தர்க்க சாஸ்திர முறை ஹெர்பர்ட் ஸ்பென்சரின் சமூக இயல் ஆய்வு, மான்டெஸ்க்யூவின் சட்டத்தின் சாரம் ஆகிய நூல்களையும், ரூசோ எழுதிய நூல்கள், கிரேக்க, ரோம இதிகாசங்கள் ஆகிய பலதர ப்பட்ட நூல்களையும் மாவோ கவனத்துடன் பயின்றார். சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பிரபலமான நூல் எதையும் அவர் படிக்காது விடவில்லை. மாணவர் சங்கம் ஒன்றை அமைத்து, அமைப்புரீதியான இயக்கத்தில் உள்ள தனது அக்கறையையும் ஆற்றலையும் மாவோ வெளிப்படுத்தினார். 1918-இல் மேற்படிப்புக்கு பீகிங் புறப்பட்டுச் சென்றார். மாவோ மீது அன்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவரின் பரிந்துரையில் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உதவியாளராக மாசேதுங் நியமனம் பெற்றார். மாவோ 1919-ஆம் ஆண்டு இறுதியில் ஹூனானுக்குத் திரும்பினார். 1921-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாங்ஷாவில் ஒரு கம்யூனிஸ்ட் அமைப்புக் கிளையை அமைக்க மாவோ உதவினார். பிறகு ஹூனான் மாகாணக் கட்சியின் செயலாளரானார்.

விவசாயிகளின் புரட்சிகரத் தன்மையின் காரணமாக அந்த வர்க்கத்தின் மீது கம்யூனிஸ்ட் கட்சி பிரதான கவனம் செலுத்த வேண்டும் என மாசேதுங் வலியுறுத்தினார். ரஷ்யப் புரட்சியின்போது லெனின் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தார். ஆனால், மாசேதுங் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிப் போராட வேண்டும் என்று விரும்பினார். 1927-இல் அகில சீன விவசாயச் சங்கத்திற்கு தலைவரானார். கோமிண்டாங் வலதுசாரி தலைவர்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் தொழிலாளர் இயக்கச் செல்வாக்கை அழிப்பது என்று முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, 1927, மார்ச் மாதத்தில் சியாங்கே ஷேக் ராணுவத்தினர் ஷாங்ஹாய் மாநகரத்துக்குள் நுழைந்து சீனர்களின் குடியிருப்புப் பகுதிகளை பிடித்துக்கொண்டனர். சியாங்கே ஷேக் ஒரு போட்டி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார்.

இதற்கு உலக ஏகாதிபத்தியங்கள் அங்கீகாரம் அளித்தன. தனது சொந்த அரசையே உதறித்தள்ளி, போட்டி அரசாங்கம் அமைத்த சியாங்கே ஷேக், ஷாங்ஹாய்
மாநகரில் கம்யூனிஸ்டுகள் மீதும், தொழிற்சங்கங்கள் மீதும் போர் தொடுத்தார். இவர்கள் அனைவரையும் வேட்டையாடி, நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுத் தள்ளி, ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்து மாபெரும் துரோகத்தை அரங்கேற்றினார்.

சியாங்கே ஷேக் கட்டுப்பாட்டில் வந்த கோமிண்டாங் அரசாங்கம், சன்யாட்சன் வகுத்தளித்த கொள்கைகளான ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்குத் துரோகம் செய்து, ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டது.

சீனச் செம்படையும், கம்யூனிஸ்ட் கட்சியும் தீரமிக்கப் போர் நடத்தியும்கூட, சியாங்கே ஷேக்கினை சுற்றி வளைத்துத் தாக்குவது என்ற உத்தியை எதிர்கொள்ள முடியவில்லை. முழுமையாக அழிக்கப்படுவதிலிருந்து தப்புவதற்காக 1934, அக்டோபரில் முற்றுகையிடப்பட்ட தளங்களிலிருந்து முற்றுகையை உடைத்துக் கொண்டு செம்படையும், கம்யூனிஸ்ட்களும் வெளியேறி வரலாறு கண்டிராத நீண்ட நெடும் பயணத்தைத் தொடங்கினர்.
மாசேதுங், சூஎன்லாய் தலைமையில் செம்படையின்

பிரதான பிரிவுகள் 85,000 வீரர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் 15,000 பேர் சியாங்ஸி மாகாண முற்றுகையிலிருந்து துணிந்து வெளியேறி வடமேற்கே 3000 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ஜெசுவான் பிரதேசத்தை நோக்கிப் பகலிலும், அதிகமாக இரவு நேரத்திலும் மழை, இடி, மின்னல், வெயில் என்று பாராமல் ஓராண்டுநடைபயணத்தை மேற்கொண்டனர். ஆண்டு முழுவதும் நாளொன்றுக்கு நடந்த தூரம் 26 மைல்கள் ஆகும். நிரந்தரமாகப் பனி மூடியிருந்த 5 மலைத் தொடர்கள் உள்ளிட்ட 18 மலைத் தொடர்களையும், 24 ஆறுகளையும், 62 மாநகரங்கள் மற்றும் நகரங்களை யும் அவர்கள் கடந்து சென்றனர். இது உலக வரலாற்றில் ஈடு இணையில்லா நிகழ்ச்சி; வேறுசில பிரதேசங்களிலிருந்தும் செம்படையினர் வடக்கு ஷான்க்சி வந்து சேர்ந்தனர்.

முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். பதினோரு மாகாணங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் காடு, மலை, வனாந்திரப் பிரதேசங்களைக் கடந்து, வரும்வழியில் பலர் மாண்டும், புதிதாகப் பலர் சேர்ந்தும், கிராமப்புறப் பிரச்சாரத்தில் இருபது கோடி மக்களைச் சந்தித்தும், இறுதியில் வெற்றிகரமாக வந்து சேர்ந்து, உலக வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட்டுகள் இணையற்ற வீரகாவியம் படைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: