சேலம், செப்.13-
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர்- மாணவர் சங்க தலைவர்களை தாக்கி, கைது செய்த தமிழக அரசை கண்டித்து சேலத்தில் மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளனர்.

தமிழக அரசின் இச்செயலை கண்டித்தும், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் அபாய்முகர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவின் குமார், நிர்வாகிகள் மோகன், வெங்கடேஷ், ராமச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply