மே.பாளைம், செப்.14-
மேட்டுப்பாளையம் அருகே மளிகை கடை ஷட்டரை உடைத்தெறிந்து அரிசி தேடி அலையும் ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவனூர், நாயக்கன்பாளையம் கிராமம் அருகே கடந்த ஒரு மாத காலமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

இந்த யானை ஊருக்குள் புகுந்து விவசாய விளைப்பொருட்களை மட்டுமின்றி, கிராம மக்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று நள்ளிரவு கோவனூரின் மையப்பகுதியில் உள்ள மளிகை கடையின் இரும்பு ஷட்டரை உடைத்தெறிந்து அரிசியினை உண்டதோடு அருகில் இருந்த ஒட்டு வீட்டின் கூரையை பிரித்து எறிந்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடிதால் உயிர்தப்பினர். இந்த ஒற்றை யானை இரவு, பகல் என எந்த நேரமும் ஊருக்குள் உலா வருவதாகவும், இதனால் யாரும் வெளியில் நடமாடவே முடியாத நிலை நீடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, பாலமலை காட்டில் இருந்து வெளியேறியுள்ள இந்த யானையினை உடனடியாக மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

Leave A Reply