கோவை, செப்.13-
டாஸ்மாக் குடோன்களில் மதுபான பெட்டிகளை இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான பெட்டிகளை ஏற்றி  இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக கூலியை உயர்த்தித்தர டாஸ்மாக் நிறுவனம் மறுத்து வருகிறது. இதனை கண்டித்தும், தற்போது லிக்கர் வகைக்கு வழங்கப்படும் கூலியை ரூ.3யில் இருந்துரூ.6 ஆகவும், பிராந்தி வகைகளுக்கு ரூ.3யில் இருந்து ரூ.5 ஆகவும், பெட்டிக்குள் பெட்டிக்கு வழங்கப்படும் ரூ.5 என்பதை ரூ.8 ஆகவும்,வெளிநாட்டு, மாநில சரக்கு வகைகளுக்கு ரூ.35 என்றிருப்பதை ரூ.50 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மற்றும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதனன்று பல்வேறுஇடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.ஜஹாங்கீர் தலைமை தாங்கினார். சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பாபு, டாஸ்மாக் குடோன் சுமைப் பணி ஒருங்கிணைப்புக்குழு மண்டல பொருப்பாளர் பீர் முகம்மது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதேபோல், பொள்ளாச்சியில் டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமலைராஜன் தலைமை தாங்கினார். சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமைப்பணி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோன் வளாகத்தில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி பிரகாஷ் தலைமை வகித்தார். சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால் பங்கேற்று கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply