திருநெல்வேலி;
போராட்டக் கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தின் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கத் திராணியற்ற அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 13 இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் …. பங்கேற்றனர்.திருநெல்வேலி பாளை. ஜவஹர் திடலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டப் பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கோதை ஆலடி அருணா,மைதீன் கான், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் உஸ்மான் கான், சிபிஐ மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அலி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்யவும் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் அவர், “அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நலன் சார்ந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது; போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கத் திராணியில்லாத மாநில அரசு பதவி விலக வேண்டும்’’ என்றும் கூறினார்.

அனிதா மரணத்தில் முதல் குற்றவாளி மத்திய அரசு. இரண்டாவது குற்றவாளி மாநில அரசு. அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்துள்ளது. இதற்கு காரணம் நீட் தேர்வை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: