கோவை, செப்.13-
முடங்கிக் கிடக்கும் பொற்கொல்லர் நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி தங்க நகை தொழிலாளர் மாகாசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிஐடியு கோயமுத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியனின் 9ஆவது மாநாடு கோவை ம.ந.க. வீதியிலுள்ள பிடல் காஸ்ட்ரோ அரங்கத்தில் செவ்வாயன்று மாவட்டத் தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.முர்த்தி, மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சந்திரன், பொருளாளர் வி.வி.பரதன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.

மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநிலக்குழு உறுப்பிட்டனர் ஆர்.வேலுசாமி, சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாறன் ஆகியோர் உரையாற்றினர். தீர்மானங்கள் இம்மகாசபையில், தங்கநகை தொழிற்சாலை மற்றும் யூனிட்டுகளில் தொழிலாளர் நலச்சட்டத்தை அமலாக்க வேண்டும். கேரள மாநிலத்தைப்போல் குறைந்த பட்ச கூலியாக ரூ.18 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். நலிந்த தங்கநகை தொழிலாளர்களுக்கு இலவச வீடுகளை அரசே கட்டிக்கொடுக்க வேண்டும். சிறு,குறு தொழிலான தங்கநகை தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நலவாரிய பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். முடங்கிப்போய் உள்ள பொற்கொல்லர் நலவாரியத்தை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக என்.எம். கண்ணன், பொதுச்செயலாளராக பி.சந்திரன், பொருளாளராக பி.மருதன் மற்றும் துணை நிர்வாகிகளாக எம்.கோபால், எம்.ஞானசேகரன், எஸ்.பழவேசம் மற்றும் 19 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave A Reply