கோவை, செப்.13-
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5ஆம் நாளாக புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வி.செந்தில்குமார், கருப்பசாமி ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடுப்பு வைத்து சமைத்துகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 36 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலம் ஸ்தம்பித்துள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்பாபு, ஆனந்தகண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசைக் கண்டித்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதன்பின் இரவு அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆஸரா, மாரியப்பன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply