போராடும் ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தமிழக அரசை ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 7ம் தேதியிலிருந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் முடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதனன்று (செப். 13) முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் பெரும்பாலான மாவட்டங்களில் கைது நடவடிக்கை தொடர்கின்றன. நீதிமன்றத்தையும், காவல்துறையும் பயன்படுத்திக் கொண்டு ஜனநாயக ரீதியில் போராடும் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்து பேசி பிரச்சனையை தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கவே தமிழக அரசு விரும்புகின்றது. அமைதியான முறையில் யாருக்கும் தொந்தரவின்றி காத்திருக்கும் போராட்டம் நடத்துபவர்களை அவ்விடத்தை விட்டு அகற்றுவதை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்த்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம். இல்லையெனில் பிரச்சனையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து தீவிரமான போராட்டத்தை அனைத்துத் துறை ஒய்வூதியர் சங்கம் முன்னெடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply