சிறுபான்மை மக்களின் நலன்காக்க மாநில அரசு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி  உள்ளது.

இவ்வமைப்பின் தென்சென்னை மாவட்ட 2வது மாநாடு செவ்வாயன்று (செப்.12) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்க வேண்டும், விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும், தலித் கிருத்துவர்களுக்கு  பட்டியலின மக்களுக்கான சலுகைகள், உரிமைகளை வழங்க வேண்டும், கபர்ஸ்தான்களுக்கு நிலம் வழங்க வேண்டும்,

வீட்டுமனைப்பட்டா இல்லாமல் குடியிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் இடஒதுக்கீட்டு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், திண்டுக்கல்லில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் மணிமண்டபத்தை உடனே திறக்க வேண்டும், உலமாக்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், உருது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசுசலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத்தலைவர் தெ.லட்சுமணன் மாநாட்டை தொடங்கி வைத்து;ப பேசுகையில், “ஆர்எஸ்எஸ், பாஜக வளர்ச்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஜனநாயகம் பேசுகிற பெரும்பான்மையான மக்களுக்கும் எதிரானது” என்றார்.

மாநாட்டை நிறைவு செய்து பேசிய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, “சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களும், சீக்கியர்களும்தான் திகார் சிறையில் பெரும்பான்மையாக உள்ளனர். புனையப்பட்ட வழக்குகளில் விசாரணையின்றி இஸ்லாமியர்கள் சிறையில் உள்ளனர். அத்தகையவர்களுக்கு ஜாமீன் கூட;க கிடைப்பதில்லை. எனவே, விசாரணையின்றி சிறையில் உள்ளவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

இம்மாநாட்டிற்கு ஒய்.இஸ்மாயில், கே.மணிகண்டன், பி.ஜீவா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஜி.ரஹமத்துல்லா வரவேற்றார். வி.தாமஸ் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். சமூகத் செயற்பாட்டாளர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம், ஜி.வெங்கடேசன், மஸ்ஜிதுர் ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் இ.எஸ்.முகமது அக்பர், இசிஐ சர்ச் பங்குத்தந்தை டி.அசரியா சத்தியகுமார், பொன்மணி ஸ்டோர் உரிமையாளர் ஜெ.பொன்சிங், பேரா.லெனின் உள்ளிட்டோர் பேசினர். பி.அஷ்ரப்அலி நன்றி கூறினார்.
நிர்வாகிகள்: 20 பேர் கொண்ட நலக்குழுவின் தலைவராக ஏ.பாக்கியம், செயலாளராக ஒய்.இஸ்மாயில், பொருளாளராக கே.மணிகண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: