பெங்களூரு;
குடகு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை போலீஸை ஏவி விட்டு மிரட்டுபவர்களை சட்டப்படி சந்திக்கப் போவதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 20 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு பகுதியில் உள்ள பண்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். செவ்வாயன்று இங்கு சென்ற தமிழக காவல்துறையினர், விடுதியில் சோதனை மேற்கொண்டு எம்எல்ஏ-க்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து புதன்கிழமையன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் இருந்து 5 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30 காவல்துறையினர் குடகிற்குச் சென்று அங்கு தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

தன்னுடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இல்லாவிட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என தமிழக காவல் துறையினர் மிரட்டுவதாகவும், ஆதரவளிக்க முன்வந்தால் அவர்களுக்கு 10 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என ஆசை காட்டுவதாகவும் தினகரன் கூறினார்.

“ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி முயற்சிக்கிறார்; அதனாலேயே தனக்கு ஆதரவு அளிக்கும் படி காவல் துறையை ஏவி மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டிய தினகரன், “இதுதொடர்பாக கர்நாடக மாநில காவல் துறையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.
தனக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் எடப்பாடி அணிக்குள்ளேயே தனக்குப் பல ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருப்பதாகவும் கூறிய தினகரன், எடப்பாடி ஆட்சிக்கு எதிராக கோரிக்கை மனு அளித்தபோது செப்டம்பர் 14-ஆம் தேதி முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியிருப்பதால், அதைப் பார்த்துவிட்டு, விரைவில் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்நாடக காவல்துறையிடம் செந்தில்பாலாஜி புகார்!
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கக்கோரி தமிழக காவல்துறை தங்களை மிரட்டுவதாக, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி குடகு அருகே உள்ள சுண்டிக்கொப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave A Reply