புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்டட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மாவட்டத் தலை நகரங்களில் புதனன்று (செப். 13) காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அவர்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு கோரிக்கைகளை முழங்கினர். இரவிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இடை இடையே காவல்துறையினர் வந்து போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் ஜாக்டோ ஜியோ முடிவின்படி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால் எழிலகம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக காட்சியளித்தது. போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநில அரசின் அராஜபோக்கை கண்டித்தும்  ஜாக்டோ ஜியோ மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். போராட்டத்திற்கு ஒலிபெருக்கி. மின்விளக்கு போட வந்த ஒலிபெருக்கி உரிமையாளரை காவல்துறையினர் மிரட்டினர்.

திருவள்ளூர் காஞ்சியில் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருக்கும் போராட்டம் நடத்திய  ஜாக்டோ – ஜியோ அமைப்பை சேர்ந்த அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல காவல்துறை அனுமதிக்காமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே கூட காத்திருக்கும் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூரில் மட்டும் அலுவலக வளாகத்தின் உள்ளே செல்லக் கூட அனுமதிக்கவில்லை. நுழைவுவாயில் உள்ள இரும்பு கேட்டை அடைத்து விட்டனர் .இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அரசிற்கு  எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். மாநில அரசு மற்றும் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை தலைவர்கள் கண்டித்தனர்.

காஞ்சிபுரத்தில் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  ஆசிரியர்களும் அரசுஊழியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை அடக்குமுறையையும் மீறி போராட்டம் நடைபெற்றது.இருப்பினும் மாலையில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: