திருப்பூர், செப்.13-
ஊத்துக்குளி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடுவதுடன், அங்கு 24 மணி நேர மருத்துவர் செயல்பட ஏற்பாடு செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்தை விரைந்து திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊத்துக்குளி நகரம், பாப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிராம செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை சுகாதாரப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ரேசன் பொருட்கள், சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். முதியோர், விதவைகள் உதவித் தொகையை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் முன்பு புதனன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தாலுகா தலைவர் அம்புஜம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டப் பொருளாளர் எஸ்.ஷகிலா, தாலுகா செயலாளர் கே.சரஸ்வதி, பொருளாளர் ஆர்.செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். நிறைவாக தாலுகா துணைச் செயலாளர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.

Leave A Reply