புதுதில்லி;
உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய அடையாளத்தைக் கொண்டிருக்கும் நகரங்களின் பெயரை நீக்க வேண்டும்; இந்து சமய அடையாளத்துடன் ஏற்கெனவே இருந்த பெயர்களை மறுபடியும் சூட்ட வேண்டும் என்று சாமியார்களின் சங்கமான அகில இந்திய அக்காரா பரிஷத் கோரிக்கை வைத்துள்ளது.குறிப்பாக அலகாபாத் என்ற பெயரை, பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று பாஜக முதல்வர் ஆதித்யநாத்தை, அக்காரா பரிஷத் நிர்வாகிகள் செவ்வாயன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாமியார் சங்கத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி, அலகாபாத்தின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என மாற்றும் எங்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டார்; இதன் மீதான உத்தரவு விரைவில் வெளியாகும் என நம்புகிறோம்; 2019-இல் நடைபெறவிருக்கும் அர்த் கும்பமேளாவில் போலி சாதுக்களுக்கு எந்த சலுகையும் தராமல் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.ஏற்கெனவே அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றும் முயற்சி, 2001-இல் ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோதும் எழுந்தது. அப்போது அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த விஷ்ணுகாந்த் சாஸ்திரியும் பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக இருந்தார். ஆனால், அப்போது நடக்கவில்லை.

அதன்பிறகு தற்போது மீண்டும் பாஜக அமைந்துள்ள நிலையில், முகலாயப் பேரரசர்கள் ஆட்சியின்போது சூட்டப்பட்டதாக கூறப்படும் பெயர்களை மாற்றும் முயற்சியை சாமியார்கள் மீண்டும் துவக்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேசத்தின் முக்கிய ரயில் சந்திப்பான ‘முகல் சராய் ஜங்ஷன்’ பெயரை, ‘தீன் தயாள் உபாத்யா’ என மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதேபோல உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள, மத வன்முறைகள் அதிகம் நடக்கும் ‘அலிகர்’ நகரின் பெயரை ‘ஹரிகர்’ என மாற்ற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இங்குதான், சர் சையது அகமது கானால் 1875-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு புகழ்பெற்று விளங்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அலகாபாத்தைப் பொறுத்தவரை, இது தெய்வீக நகரங்களில் ஒன்று என்றும், கங்கை, யமுனை மற்றும் ‘பூமிக்கு அடியில் ஓடும்’ சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் திரிவேணி சங்கமம் இங்குதான் உள்ளது என்று கூறும் சாமியார்கள், ‘பிரயாக்ராஜ்’ என்றிருந்த இதன் பெயரை முகலாயப் பேரரசர் அக்பர்தான் 1580-ம் ஆண்டு ‘அல்லாபாத் (அல்லாவின் நகரம்)’ என மாற்றியதாக கூறுகின்றனர்.

இந்த நகரம் அப்போது வளமும் செழிப்பும் மிகுந்து இருந்ததாலேயே அக்பர் இந்த நகரத்தை அல்லாவின் நகரம் என்று குறிக்கும் வகையில் பெயரை மாற்றியதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: