1956 – இரண்டாம்நிலை நினைவகமாக சுழலும் காந்த வன் தட்டு (ஹார்ட் டிஸ்க்) கொண்ட முதல் வர்த்தக ரீதியிலான கணிணியை ஐபிஎம் வெளியிட்டது. IBM 305 RAMAC(Random Access Method of Accounting and Control) என்ற பெயர் கொண்ட இக் கணிணிதான், கணக்குப் பதிவில், தகவல்களை மொத்தமாக, வரிசைப்படுத்தி உள்ளிடும் பழைய முறைக்கு பதிலாக, உடனுக்குடன் உள்ளிடும் நிகழ் நேரச் செயலாக்கம் (ரியல்டைம் ப்ராசசிங்) என்ற புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த முதல் கணிணி! வெற்றிடக் குழாய்களை (வேக்குவம் ட்யூப்) பயன்படுத்திய கடைசி ஐபிஎம் கணிணிகளில் ஒன்றான இதன் எடை ஒரு டன்! இந்தக் கணிணி 50 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டது.

இதில் இணைக்கப்பட்ட வன் தட்டு இரண்டு நடுத்தர அளவு குளிர்சாதனப் பெட்டிகளின் அளவும், 16 சதுர அடி பரப்பும் கொண்டது. இந்த வன் தட்டில் 3.75 மெகாபைட் அளவுக்கு 6 பிட் தகவலைச் சேமிக்கலாம்! இன்றைய டிவிடியின் கொள்ளவில் 1250ல் ஒரு பங்கு! இவைதவிர, கார்ட் பன்ச், சிபியு, பவர் சப்ளை யூனிட், கார்ட் ரீடர், பிரிண்ட்டர் ஆகியவையும் இந்தக் கணிணியில் இருந்தன. இது, 64,000 துளையிடப்பட்ட அட்டைகளை (பன்ச்ட் கார்ட்) வைக்கும் வசதி கொண்டிருந்தது.

நிரல்கள்(ப்ரோக்ராம்), இதன் முதன்மை நினைவகமான, அக்காலத்திய ட்ரம் மெமரி-யில் பதிவு செய்யப்பட்டன. நிரல்களை கணிணி மொழிக் கட்டளைகளாக எழுதுவதோடன்றி, இதை இயக்க, மேற்குறிப்பிட்ட சாதனங்களை வெவ்வேறு இடங்களில் மாற்றி (ஜம்ப்பர்) இணைப்புக் கொடுக்கவும் வேண்டும். இக் கணிணியின் நினைவக திறனை 5 எம்பிக்கு அதிகமாகவும் உயர்த்தலாம் என்றாலும் அவ்வளவு அதிக(!) நினைவகத்தை யாருக்கு விற்பனை செய்வது என்று தெரியாததால் ஐபிஎம் உயர்த்தவில்லை!

Leave A Reply

%d bloggers like this: