அல்சைமர் என்ற அழைக்கப்படும் மறதி நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மங்களூர் ஆகிய நகரங்களில் செப்.24 ஆம் தேதி காலை 5 மணிக்கு அரை மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை நகரில் பெசன்ட்நகரில் நடைபெறவுள்ளது. அல்சைமர் பாதிப்புக்கு உள்ளானவர்களை புறக்கணிக்காமல் அவர்கள் அந்த பாதிப்பில் இருந்து விடுபட குடும்பத்தினர் மற்றும் உடனிருப்பவர்கள் உதவவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதியவர்கள் பலர் இந்த மறதி நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று குடும்பத்தினர் கூட விரும்புவதில்லை. எனவே அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்களை  குணப்படுத்த முடியும். அவர்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் விதைக்க ஆண்டுதோறும் செப்.21 ஆம் தேதி உலக அல்சைமர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளையொட்டி செப்.24 ஆம் தேதி நடத்தப்படும் மாரத்தான் ஓட்டத்திற்கு பர்ப்பிள் ரன் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது அரைமாரத்தான் என்றும் இதில் விளையாட்டு வீரர்கள், அல்சைமர் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என ஓட்டம் நடத்தப்படும். இதில் கிடைக்கும் நன்கொடைகள்  தேசிய மனநல அறிவியல் சுகாதார நிலையத்திற்கு வழங்கப்படும் என்று பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார். அப்போது நிம்மன்ஸ் டாக்டர் கிருஷ்ணபிரசாத், பெண் பைக் சாம்பியன் அலிஷா  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply