அன்புள்ள கால்வதுறையினருக்கு!

நேற்று (12.09.2017) நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்திய மாணவர் சங்க தலைவர்கள், தோழர்கள், மாணவர்கள் பேரணி சென்றார்கள். உங்களிடம் அனுமதியும் பெற்றிருக்கிறார்கள்.

ஒருவேளை நியாயமான கோரிக்கை இல்லாமல், அனுமதியும் பெறாமல் அவர்கள் பேரணி நடந்திருந்தால் கூட நேற்றைய உங்கள் நடவடிக்கை நாகரீகமானதா? சட்டத்திற்கு உட்பட்டதா? படித்தவர்கள் செய்யும் காரியமா?.

மாணவர்களின் கழுத்தை நெறித்து, தர தரவென இழுத்து வேனில் மோதியிருக்கிறீர்கள்.

மறியல் செய்தவர்களை காலைப்பிடித்து தார் ரோட்டில் இழுத்துச் சென்றிருக்கிறீர்கள்.

அவர்கள் உங்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக போராடுகிற போது கையை மடக்கி முதுகு தண்டில் மீண்டும், மீண்டும் குத்தியிருக்கிறீர்கள்.

பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்தியிருக்கிறீர்கள்.
காலின் மேல் பூட்ஸ் காலோடு நின்று அவர்கள் வலியால் துடிப்பதை ரசித்தியிருக்கிறீர்கள்.

ஒரு மாணவரை நான்கு பேர் சுற்றி நின்று தாக்க இன்னொருவர் அவர் கையை இழுத்து விரலை ஒடிக்க முயற்சித்தியிருக்கிறீர்கள்.

குறைந்தபட்சம் 5 பேரிடமாவது இந்த விரல் ஒடிப்பு வீரத்தை காட்டியிருக்கிறீர்கள்.

சீருடையில் இல்லாத ஒரு நபரைத் தான் மூன்று மாணவர்கள் இவர் தான் அப்படிச் செய்தவர் என்று அடையாளம் காட்டியவர்கள்.

பெண் குழந்தைகளையும் தலைமுடியைப் பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.

அவர்களுடைய மேலாடையை பலவந்தமாக பிடுங்க முயற்சித்திருக்கிறீர்கள்.

தங்களைக் காத்துக் கொள்ள ஒருவரையொருவர் கட்டித் தழுவி நின்று கொண்டிருந்த போது அவர்கள் மீது மாணவர்களை தூக்கி வந்து மாணவிகளின் கும்பலுக்கு நடுவே தொப்பென போட்டியிருக்கிறீர்கள்.

அவர்களை வண்டியில் ஏற்றுவதற்காக இழுக்கும் போது உங்கள் கைகள் தொட்ட இடங்களின் பெயர்களை எழுதக் கூட மனசு கூசுகிறது.

இந்த வெறித்தனமும், வெட்கங்கேட்ட தனமும், காட்டுமிராண்டி குணமும் உங்களிடம் எப்படி வந்து சேர்கிறது.

நீங்கள் நேற்று நடத்திய அந்த கேவலமான நிகழ்வுகளை ஒருமுறை உங்கள் மனதிற்குள் ஓடவிட்டு பாருங்கள். உங்கள் குழந்தைகளிடம், மனைவியிடம், மகளிடம் காவல்துறை இல்லாத உங்கள் நண்பர்களிடம் இதுகுறித்து பேசுங்கள். இது வீரமா? வெட்கங்கெட்ட செயலா? என்பதை அவர்கள் சொல்லட்டும்.

பல நேரங்களில் நியாயமான கோரிக்கைகளுக்காக நிற்கிற  கூட போது நீங்கள் லத்தியால் அடித்தியிருக்கிறீர்கள், துப்பாக்கியால் சுட்டிருக்கிறீர்கள், கற்கள் வீசிக் கூட தாக்கியிருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் அத்துமீறல், அராஜகம், முரட்டுத்தனம் என்கிற வார்த்தைகளுக்குள் அடைத்து விட முடியும்.

அவையெல்லாம் உங்கள் உயர் அதிகாரிகளின் நிர்பந்தத்தால், ஆணையால் செய்ததாக இருக்கக் கூடும். ஆனால் விரல் ஒடித்தல், பூட்ஸ் காலால் மிதித்தல், துப்பட்டாவை இழுத்தல் தொடக் கூடாத இடங்களை வலிந்து தொடுவது வலிஏற்படுத்துவது இதுவெல்லாம் உங்கள் சொந்த மூளையின் வக்கிரங்கள்.

உங்கள் அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். கடித்துக் குதறும் உங்களைப்போன்றவர்களை அவர்கள் மெச்சக்கூடும். ஆனால் இனிமேல் உங்களைப் போன்றவர்களை பொதுவாக விமர்சிப்பதை தாண்டி இத்தகைய கேவலமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்களை நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில், நீங்கள் பணி செய்யும் பகுதிகளில் சமூக வலைதளத்தில் வெளியிட்டு குறைந்தபட்சம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலும், உங்களைப் போன்றவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்க விரும்புகிறேன்.

குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளும் குடும்பமும் பெற்றோர்களுமாவது உங்களுக்கு குறைந்தபட்ச நாகரீகத்தை கற்றுக் கொடுக்கட்டும்.

  • Kanagaraj Karuppaiah

Leave A Reply