அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை திங்களன்று (செப். 18) வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் காரக்பூர் ஐஐடியின் முன்னாள் இயக்குநர் அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி.வி.விஸ்வநாதன் அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருக்கும்போது பேராசிரியராகப் பணியாற்றியவர்.  பல்கலைக்கழகத்தின் தொடர்பில் இருந்த ஒருவரை துணைவேந்தர் தேடுதல் குழுவில் நியமிக்கக் கூடாது என்று பல்கலைக்கழக சட்ட விதிகள் கூறுகிறது. எனவே, இவரை நியமித்தது சட்டவிரோதமானது.

இதைத் தவிர்த்து துணைவேந்தர் பதவிக்கான கல்வித் தகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்களையே அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்க முடியும் என்று பல்கலைக்கழக சட்ட விதிகள் கூறுகிறது. ஆனால், அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு துணைவேந்தர் பதவி வழங்கலாம் என்று சட்டத்திற்கு புறம்பாக கல்வித் தகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது யுசிஜி மற்றும் அண்ணா பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது.

எனவே, இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த இரு அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். துணைவேந்தர் தேடுதல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு புதனன்று (செப். 13) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கடந்த ஏப்ரல் மாதமே அனந்த பத்மநாபன் பல்கலைக் கழகத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். அதன் பின் ஜூன் மாதம் தான் அவரை குழுவில் சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கான தகுதி குறித்த பல்கலைக் கழக மானியக் குழு விதிகளை தமிழக அரசு ஏற்காத நிலையில் அதைப் பின்பற்றவில்லை என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை திங்களன்று (செப். 18) வழங்குவதாகத் தெரிவித்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சோபனா, காரல் மார்க்ஸ், பர்வின் பானு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: