புதுதில்லி;
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ள 7 எம்.பி.-க்கள், 98 எம்எல்ஏ-க்களின் பட்டியலை, மத்திய நேரடி வரி வருவாய் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் “லோக் பிரகாரி” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் வருமானத்திற்கு அதிகமாக குவித்துள்ள சொத்து குறித்து, ஆய்வு செய்தது.

தேர்தலில் போட்டியிட்டபோது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்து எவ்வளவு, தற்போது உள்ள சொத்து எவ்வளவு என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள், 257 எம்.எல்.ஏ.க்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. அதில், “37 எம்.பி.க்கள், 257 எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் திடீரென இவ்வளவு சொத்துக்கள் வந்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பி இருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மத்திய நேரடி வரி விதிப்பு ஆணைய வழக்கறிஞர் ஆஜராகி “மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ததாகவும், அப்போது 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணிசமாக உயர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்றும் கூறியிருந்தார்.

அப்போது, சொத்துக் குவித்துள்ள அந்த 7 எம்எல்ஏ-க்கள், மற்றம் 98 எம்எல்ஏ-க்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த எம்.பி., எம்எல்ஏ-க்களைப் பற்றி தகவல்கள் அடங்கிய அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து நேரடி வரி விதிப்பு ஆணையம் செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இவர்கள் தவிர, மேலும் 20 எம்.பி.க்கள், 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை நேரடி வரி விதிப்பு ஆணையம் மதிப்பிட்டு வருகிறது. விரைவில் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply