மக்கள் பிரச்சனைகளை புறந்தள்ளியும், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் மக்கள் மீது அடக்குமுறையினை ஏவிவிட்டுள்ள பெரும்பான்மையை இழந்துவிட்ட மைனாரிட்டி எடப்படி பழனிச்சாமி அரசு இனியும் நீடிப்பதற்கு துளியும் அருகதையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (12.09.2017) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், கிராமப்புற – நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா மரணமடைந்துள்ளார். இவரைப் போன்றே பல்லாயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்து விட்டது. நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு கடைசி நேரத்தில் ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது. தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய பாஜக அரசை தட்டிக் கேட்க அதிமுக அரசுக்கு திராணியில்லை. மாறாக, போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை தொடுப்பது, மாணவர்களை கைது செய்து சிறையிலடைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அதிமுக அரசும், தமிழக காவல்துறையும் கையாண்டு வருகிறது.

தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தேதி அறிவித்துள்ளார்கள். இதுபோன்றே தங்களது உரிமைகளுக்காகப் போராடி வரும் மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண தமிழக அரசு முயற்சிப்பதில்லை. மாறாக எடப்பாடி தலைமையிலான அரசு தங்களை பாதுகாத்துக் கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏராளமான பணம் புரள்வதாக வரும் செய்திகள் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மறுபக்கம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவினை தாங்கள் விலக்கிக் கொள்வதாக 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துவிட்ட நிலையில் இந்த அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்பது அனைவரும் அறிந்ததாகும். எனவே சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென தமிழக எதிர்கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆளுநர் அவர்களை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதே கோரிக்கைகளை வற்புறுத்தி எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்டு பல நாட்கள் கடந்த பின்னரும், ஆளுநரும், குடியரசுத் தலைவரும் தனது சட்டரீதியான கடமையினை நிறைவேற்ற தவறி வருகின்றனர். மைனாரிட்டி அரசாக இருப்பினும் இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு அக்கறையுடன் உள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசினை தாங்கிப்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பாஜக அரசின் இப்போக்கினை கண்டித்து குரலெழுப்பிட வேண்டுமென தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மக்கள் பிரச்சனைகளை புறந்தள்ளியும், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் மக்கள் மீது அடக்குமுறையினை ஏவிவிட்டுள்ள பெரும்பான்மையை இழந்துவிட்ட மைனாரிட்டி எடப்படி பழனிச்சாமி அரசு இனியும் நீடிப்பதற்கு துளியும் அருகதையில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவ்வரசினைக் கண்டித்தும், மாணவர்கள், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டு போராடும் அனைத்துப் பகுதி மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பிட முன்வர வேண்டுமென்று தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Leave A Reply