கொல்கத்தா, செப். 11-

மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற கிளர்ச்சிப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் காவல்துறையினரால் கடுமையாகத்தாக்கப்பட்டார்.

விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்தல், அனைவருக்கும் டிஜிடல் ரேஷன் கார்டுகள், சம வேலைக்கு சம ஊதியம், மூடிய தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இடது முன்னணி சார்பில்  இம்முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தலைநகரான பராசத்தில் இடது முன்னணியைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் காவல்துறையினரின் தடையரண்களை மீறி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை நோக்கி முன்னேறினார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் புல்லட்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகியவற்றால் சுட்டும், குண்டாந்தடிகளால் கண்மூடித்தனமாகத் தாக்குதல்களும் தொடுத்தனர். இதில் மிகவும் கொடூரமான விஷயம் என்னவென்றால் காவல்துரையினரே போராடும் மக்கள்மீது எறிகுண்டுகளை வீசியதாகும்.  எனினும் போராட்டத்தில் ஈடுபட்டோர் எதற்கும் அஞ்சாது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இதில் பல இடதுசாரி ஊழியர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சிஐடியு தலைவருமான கார்கி சாட்டர்ஜி எறிகுண்டுத்தாக்குதலால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய மாணவர் சங்க ஊழியர் பத்ரி பிஷால் கோஷும் எறிகுண்டுத் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறுவிதங்களில் காயங்களுக்காளாகியுள்ளார்கள். ஆத்திரமடைந்த ஊழியர்கள் ரயில்களை மறித்தனர்.

பங்குரா மாவட்டத்தில் அமைதியாக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மிகப்பெரிய அளவிலான காவல்துறை பட்டாளம், இடதுசாரி ஊழியர்களை விரட்டிச்சென்று கண்ணீர்புகைக் குண்டுகளால் சுட்டுள்ளனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் அபாய் முகர்ஜி உட்பட பலர் காயமுற்றுள்ளனர். முகர்ஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் தம்லுக்கில் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ரபின் தேவ், மாவட்டச் செயலாளர் நிரஞ்சன் சிஹி காயங்கள் அடைந்துள்ளார்கள். மேலும் சிஹி கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான கிளர்ச்சிப் போராட்டங்கள் இன்று நடைபெறாத மாவட்டங்களில் செப்டம்பர் 13 அன்று நடைபெறுகிறது. காவல்துறையினரின் தாக்குதலை தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் வி.சீனிவாசராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்

(ஐ.என்.என்.)

Leave A Reply