சென்னை, செப்.12-
மத்திய அரசின் ஜிப்மர், எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள சென்டர் ஆப் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட 9 மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போல், தமிழ்நாடு மாநில அரசு நிறுவிய மருத்துவக்கல்லூரிக்கும் விலக்கு அளிக்கவேண்டும்; இல்லையேல் மாணவர்-இளைஞர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகப் போராடும் என்று மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு சென்னையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையில்அடைக்கப்பட்டுள்ள மாணவர்-இளை ஞர்களை திங்களன்று புழல் சிறையில் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது வருமாறு: கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரக் கோரியும் டாக்டர் ஆகும் கனவு தகர்ந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் மறைவிற்கு நியாயம் கேட்டும் தமிழ்நாடு முழு வதும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்கள் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களை ஒடுக்க அவர்களின் மீது கடுமையான தாக்குதல்களையும் பொய்வழக்குகளையும் காவல்துறை தொடுத்து வருகிறது. 36 பேர் மீது பொய் வழக்கு புனையப்பட்டு சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக உரிமை மீறலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுப்பதோடு இந்த அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் ஜனநாயக ரீதியில் அடிப்படை உரிமைகளாகும். இதனை உச்சநீதிமன்ற ஆணை தடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட மாணவர்கள், வாலிபர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்யவேண்டும். விடுதலை செய்யப்படவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டங்களை நடத்தும். பாஜகவின் நீட் ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் ஆதரவு
அளிக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக மக்களின் மனநிலையை புரிந்து மத்திய- மாநில அரசுகள் செயல்படவேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். சிறையில் உள்ள மாணவர்கள் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகளை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், இரா.முரளி, எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா, வி.ஆனந்தன், தீபா ஆகியோரும் சந்தித்துப்பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: