போபால்;
‘நீட்’ தேர்வு அடிப்படையிலான கலந்தாய்வில், மோசடி நடந்துள்ளதாக கூறி, பாஜக-வைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் 94 இடங்களுக்கு நடந்த மாணவ சேர்க்கையில் மோசடி அரங்கேறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பிரச்சனை தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்கெனவே நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட மருத்துவக் கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் அதிகம் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்றன.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய பிரதேச மாநில அரசு ஏற்கனவே நடத்திய மருத்துவக் கலந்தாய்வை ரத்து செய்தது. புதிதாக மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை தயார் செய்து, கலந்தாய்வு நடத்தியது. ஆனால், இந்த கலந்தாய்விலும் மோசடி நடைபெற்று உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

8 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்த 94 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாணவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவ சேர்க்கைக்கான இடங்களை ஒதுக்கீட்டில் அன்று முழுவதும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான பட்டியல் 9 மணிக்கு வெளியிடுவதற்கு பதிலாக நண்பகல் 11 மணியளவில் வெளியிடப்பட்டு உள்ளது. 940 மாணவர்களுக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடுவதிலும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மாநில கலந்தாய்வு கமிட்டியால் மாலை 5:30 மணியளவில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடத்திற்கான மொப்-அப் ரவுண்டு மெரிட் லிஸ்ட்டில் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 13-வது இடமும், மாநில அளவில் முதலிடம் பிடிந்த மாணவர் பெயரும் இடம்பெற்று இருந்தது என மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மத்தியப் பிரதேச மாநில மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்குவதை கருத்தில் கொள்ளவேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் மீறி பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் பெயரும் மெரிட் பட்டியலில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பல்வேறு மெடிக்கல் கல்லூரிகளில் காலியாக இருந்த இடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியே தெரிவிக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அவர்கள் கலந்தாய்வு மோசடியைக் கண்டித்து, பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான ‘வியாபம்’ ஊழல் நடந்தது, பாஜக ஆளும் இதே மத்தியப் பிரதேசத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: