புனே;
பெரிய தொழிலதிபர்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிப்பது சவாலாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

புனேயில் நடந்த கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில், இதனைக் கூறியுள்ள அருண் ஜெட்லி, விவசாயிகள், சிறு தொழில் நடத்துவோர் பெயரிலான வராக்கடன் மிகக்குறைவுதான் என்று ஞானோதயம் பெற்றுள்ளார்.விவசாயம், சிறு தொழில்களுக்காக சிறிய அளவில் கடன் பெறுபவர்கள் அதனை திருப்பி செலுத்தா விட்டாலும், அது வங்கிகளின் வாராக்கடன் அளவைப் பொறுத்தவரை குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் என்று கூறப்படும் தொழில் அதிபர்கள் பலர் கடனை முறையாக திருப்பி செலுத்தாததே வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது; அவர்களுக்கு கொடுத்த கடனை திரும்ப பெறுவது வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று ஜெட்லி பேசியுள்ளார்.

“விவசாயிகள், தொழில் அதிபர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்புக்கு கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன; ஆனால் கடனை வாங்குபவர்கள் அதனை முறையாக திருப்பி செலுத்தத் தவறும் பட்சத்தில் வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது; இது நாட்டின் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

வங்கிகளிடம் இருந்து பெருமளவில் கடனை பெற்றுக் கொண்டு திரும்ப செலுத்தாமல் இருக்கும் பெரும் தொழில் அதிபர்களிடம் இருந்து தற்போது, முதல் முறையாக பணத்தை வசூலிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது; இவ்வாறு மீட்கப்படும் பணம் கிராமப்புற மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்” என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.முன்னதாக இந்த விழாவில் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, ஜெட்லி வெகுவாகப் புகழ்ந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி சேரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் பின்னணியில், அதை உறுதிப்படுத்துவதாக, சரத் பவார் பற்றிய ஜெட்லியின் பேச்சு அமைந்திருந்தது.

Leave A Reply