போபால்,

மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவர்களின் முகத்தில் கரியை பூசி கிராமத்திற்குள் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சுங்ராலி மாவட்டம் ஓபரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துள்ளனர். பின்னர் மூன்றாவது நாள் மாணவர்கள் 5 பேரும் பள்ளிக்கு சென்றனர். அப்போது வகுப்பு ஆசிரியர் பிரஜாபதி , மாணவர்களிடம் இரண்டு நாள் விடுப்புக்கான காரணம் கேட்டதுடன், அதற்கு தண்டனையாக மாணவர்களின் முகத்தில் கரியை பூசி பின்னர் கிராமத்திற்குள் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி முதல்வரிடம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். ஆனால் பள்ளியின் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்திடமும் , ஆசிரியரிடமும் விசாரணை நடந்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் அனுராக் சவுத்ரி , மாணவர்களை இது போன்று அதுவும் பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. விசாரணையை அடுத்து ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கானாவில் பள்ளி ஒன்றில் சீருடை அல்லாமல் வேறு உடையில் வந்த மாணவியை உடற்கல்வி ஆசிரியர் ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்தார்.

Leave A Reply

%d bloggers like this: