கோவை, செப்.12-
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் காவியா தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் தினேஷ் குமார், மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகர், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் மனோஜ், விஜய், சஞ்சய் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 மாணவிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

நாமக்கல்:
நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்திற்கும் நீதி கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மாணவி அனிதாவின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, மாணவர் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டம்,கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவி அனிதா மற்றும் மகாகாவி பாரதியின் உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர்:
தியாகி குமரன் நினைவகம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், மாணவர் சங்க மாவட்டத் துணைச்செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் உரையாற்றினர். இதில் மாணவிகள், இளைஞர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: