சேலம், செப்.12-
சேலத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பேரணி சென்ற சமூக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை கண்டித்தும், அனிதா மறைவிற்கு நீதி கேட்டும் சேலத்தில் சமூகநீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் கடந்த செப்.8ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) பேரணி மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையினர் உரிய அனுமதியோடு நடைபெற்ற இந்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இப்பேரணியில் பங்கேற்ற 1072 பேர் மீது தற்போது சேலம் மாநகர காவல்துறை திடீரென வழக்கு பதிவு செய்துள்ளது. சேலம் மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் திங்களன்று சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மமக, தவாக, திவிக, திக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் காவல்துறையின் நடவடிக்கை கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வருகின்ற செப்.21ம் தேதியன்று சேலம் அம்பேத்கர் சிலை முதல் பெரியார் சிலை வரை மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் மாபெரும் மனிதசங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மாணவர் – இளைஞர்ளை நேரடியாக சந்தித்து துண்டுபிரசுரம், தெருமுனைப் பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: