புதுதில்லி;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீதாராம் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தன்மீதான குற்றச்சாட்டை, நிதிஷ் குமார் மறைத்து விட்டதாகவும், அவரின் முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
1991-ம் ஆண்டு ‘பர்’ தொகுதி மக்களவை இடைத் தேர்தலின்போது அந்த நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நிதிஷ்குமாரும், அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர்.

இதையொட்டி ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீதாராம்சிங் என்பவர் பலியானார். இது தொடர்பான வழக்கில் நிதிஷ்குமார் மீதான குற்றச்சாட்டை போலீசார்கைவிட்டனர். ஆனாலும் 2009-ல் மீண்டும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் 302 மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் 27 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், 2006 மற்றும் 2012 சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, நிதிஷ்குமார் அளித்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வழக்கை குறிப்பிடாமல் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி தில்லியை சேர்ந்த எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2006 மற்றும் 2012 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தன் மீதான கொலை வழக்கு பற்றிய விவரங்களை குறிப்பிடவில்லை; மேலும் இந்த வழக்கில் கைதாவதை தவிர்ப்பதற்காக முதல்வர் பதவியில் இருந்த அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்; எனவே நிதிஷ்குமார் மீதான வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்;

குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என்ற தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் எம்.எல்.சி. பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: