நாட்டில் பொதுத் தேர்தலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பரபரப்பானது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்  தேர்தல்.
நாட்டில் நிலவும் பொதுவான சூழல் காரணமாக, அரசியல் சித்தாந்தங்கள் ரீதியாக வலுவான அடித்தளத்தை கொண்ட பல்கலைகழகம் தில்லி ஜவஹர்லால் பல்கலைகழகம். இங்கு இடதுசாரி மற்றும் வலதுசாரி தத்துவங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவது வழக்கமாக இருக்கும். இருப்பினும் தற்கரீதியாக இடதுசாரி அணியினரே வெற்றி பெறுவது வழக்கம். இதன் காரணமாக மோடி அரசு பதவியேற்றதில் இருந்து இந்த பல்கலைகழகத்தை சீர்குலைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கன்னய்யகுமார் கைது, நஜீப் மர்மம் என பல்வேறு தொடர் தக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் மாணவர் பேரவை தேர்தலில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கும்பல் எப்படியாவது எல்லாவித அதிகாரத்தையும் பயன்படுத்தி இடதுசாரி மாணவர்களை தோற்கடிக்க வேண்டும் என களம் இறங்கினர். இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டின் மாணவர் பேரவை தேர்தல் பரபரப்பாக இருந்தது.

தேர்தல் முடிவின் படி தற்போது வலதுசாரிய கருத்தியலை முற்றிலுமாக முறியடித்து இடதுசாரி மாணவர் அணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜெ.என்.யு.வில் கடந்த 5 வருடங்களில் முதல் பெண் தலைவரை  அந்த பல்கலைகழக மாணவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிணைந்த இடதுசாரி கூட்டணியை சேர்ந்த கீதா குமாரி, 6 வருடங்களாக ஜெ.என்.யு.வில் படித்து வருகிறார்.. ஃப்ரன்ஞ்ச் மொழியில் இளநிலை, நவீன வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர் தற்போது நவீன வரலாற்றில் ஒன்றிணைந்த எம்.பில் – பி.எச்.டி மாணவியாக இருக்கிறார். ஜெ.என்.யு.வில் சேர்ந்த முதல் நாளில் இருந்து

All India Students Association  (AISA) அனைத்திந்திய மாணவர் சங்கத்தில் இருக்கிறார். கீதா குமாரி தனது வெற்றியை கொண்டாடி நேரத்தை வீணடிக்காமல் , பல்கலைக்கழகத்தையும், நாட்டையும் பாதித்த இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு கான உடனடியாக செயல்பட ஆரம்பித்து விட்டார். இதுகுறித்து இடிஇஎஸ் லைவ் இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதன் விபரம் வருமாறு:

வாழ்த்துகள் . தேர்தலில் இதே போன்ற ஒரு மாபெரும்  வெற்றி பெறுவீர்கள் என நினைத்தீர்களா ?

ஆமாம், இது போன்ற வேளையில் இது தான் நடக்கும் என நம்பிக்கை வைப்போம். ஆனால் அதன் முடிவு இறுதியில் தான் தெரிய வரும். ஆனால், இங்கு AISA மற்றும் பிற மாணவர் அமைப்புகளும் மிக கடுமையாக உழைத்தன. நானும் கடந்த 6 வருடமாக AISA-வில் இருக்கிறேன். நானும் இதற்காக மிக கடுமையாக உழைத்ததால், கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.


இந்த முறை இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்ததற்கான காரணம் என்ன?

இது வரை எந்த அரசும் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலைகழகத்தில் அரசியல் ரீதியான தாக்குதல் இருந்து வருகிறது. ஏன், நாட்டில் உள்ள மிக பெரிய தலைவர்கள் கூட ஜெ.என்.யு-வை மூட வேண்டும் என அரசியல் உள்நோக்கத்துடன் கூறி வருகின்றனர். ஆனால் இடதுசாரிகள்தான் ஜெ.என்.யு பல்கலையை பாதுகாக்க கோரி வருகின்றனர். இது தான் எங்களை தனித்து காட்டுகிறது. எதற்காக வாய்ப்பை நழுவவிட வேண்டும்? இதன் காரணமாக இடதுசாரி அமைப்புகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை விடுத்து ஒன்றிணைந்தோம். அது மட்டுமல்லாமல், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த போராட்டத்திற்கு பின் இடதுசாரி மாணவ அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் இடது முன்னணி ஒருவலுவான கூட்டமைப்பாக உருவாக வேண்டும் என  என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக தான் தற்போது நாங்கள் ஒன்றிணைந்து வலிமைமிக்க முன்னணியாக இருந்து வருகிறோம்.

புதிய கல்வி ஆண்டிற்கான உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன?

முதல் கட்டமாக நஜீப் விவகாரத்திற்கு ஒரு முடிவு காண வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக வலுவான போராட்டத்திற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைப்பு , இழந்தவற்றை திரும்ப கொண்டு வருவோம். இது நாட்டின் பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இடமாக இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் பயனடைந்துள்ளனர். இந்த வருடம் இட ஒதுக்கீடு முறை கூட முறையாக பின்பற்றப்படவில்லை. பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுயாட்சி மற்றும் ஜனநாயகத்தையும் திரும்பகொண்டு வர வேண்டும். இதோடு மட்டும் அல்லாமல் , பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கூருணர்வு திறன் குழுவில்(Gender Sensitivity Committee Against Sexual Harassment – GSCASH) மாணவர் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதை உறுதி செய்வோம்.  தேவையான நிதி இருந்த போதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதிகள் கட்டப்படவில்லை. இந்த இடங்களில் விடுதிகள் அமைக்கப்படும் என கூறுவதற்கு வாரியம் உள்ளது. ஆனால் அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் கூட தொடங்கப்படவில்லை. விடுதிகள் அமைக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.

இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நஜீப் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு செயல்பட போகிறீர்கள் ?

இதற்கான அரசியல் ரீதியான வலுவான இயக்கத்தை நடத்தி அதன் மூலம் அவரது பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம். தில்லி காவலர்கள் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் கூட தெரிவித்துள்ளது. நாங்கள் நஜீப்பை மறக்கவில்லை , எப்பொழுதுமே மறக்க மாட்டோம் என அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம். இதற்கு காரணமாணவர்களிடம் கண்டிப்பாக முறையிடுவோம். எங்களில் ஒரு மாணவரை காணவில்லை. அவரை கண்டுபிடிப்பது எங்கள் கடமை.

மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர்களான கண்ணையா குமார் , மோகித் பாண்டே ஆகிய இருவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இருவர் மீதும் வழக்குகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நெருக்கடி இடதுசாரியான உங்கள் மீதும் திணிக்கப்படும் என நினைக்கிறீர்களா?

ஆமாம். கண்டிப்பாக எனக்கும் அதே போல் நெருக்கடி இருக்கும். நிர்வாகமே பல்கலைக்கழகத்தை அழிக்க முயற்சி செய்கிறது. மாணவர்கள் ஒன்றிணைந்து பல்கலைக்கழகத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறோம். எங்களை ஒடுக்க நிர்வாகம் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறக்கும் . இந்த வருட மாணவர் சேர்க்கையில் மோகித் பாண்டேவிற்கு இடம் கிடைக்கவில்லை என்பதே இதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம். ஆனால் நாம் நினைப்பதை கூறுவதற்கும் , செயல்படுத்தவும் முழு சுதந்திரமும் ஜனநாயகமும் இருக்கிறது என்பதே நமது நாட்டின் அடிப்படை நெறிமுறையாகும். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமும் பல தரப்பட்ட பின்னணியுடைய மாணவர்கள் குறிப்பாக பெண்கள் இங்கு மேற்படிப்பு பயில்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஜெ.என்.யூ இல்லாமல் போனால் இதற்காக வாய்ப்பும் இல்லாமல் போகும். அதனால் பல்கலைக்கழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எங்களால் அனுமதிக்க முடியாது.

எப்பொழுதும் உங்களுக்கு எதிராக இருக்கும் நிர்வாகத்தை எவ்வாறு கையாளுவீர்கள்? பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா?

கண்டிப்பாக, துணை வேந்தரிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்வோம். முன்பு நாங்கள் பேச்சு வார்த்தை நடந்த முயன்ற போது , முன்னாள் மாணவர் சங்கத்திடம் அவர் நடந்து கொண்ட விதம், அவர் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை என்பதையே காட்டியது. எங்களது சித்தாந்தமே, பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண்பது என்பதுதான். அதை தான் நாங்கள் செய்வோம். அவர் கண்டிப்பாக எங்களை சந்தித்து நாங்கள் கூறுவதை கேட்பார் என நம்புகிறோம்.

கடந்த 5 வருடங்களாக போராட்டங்கள் மிக ஆக்ரோசமாக இருந்தது அல்லது அவ்வாறாக தோன்றியது. இந்த வருடம் அடங்கி போகிற அணுகுமுறையை உங்கள் சங்கம் தேர்ந்தெடுக்குமா?

இது துணை வேந்தரின் செயல்பாடுகளை பொறுத்தது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் நிலையம் கொண்டு வர முயன்றார். வழக்கறிஞர் மோனிகா அரோராவும் , பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு காவல் நிலையம் வேண்டும் என கூறினார். பல்கலைக்கழக வளாகத்தில் காவல் நிலையம் இருப்பதை எந்த மாணவர் விரும்புவார் ? ஜெ.என்.யு.வில் போராட்டம் நடக்கிறது என்பது இது முதல் முறை அல்ல. பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு வருடங்களாக நடந்த போராட்டங்கள் எதுவும் ஆக்ரோசமாகவோ , வன்முறையாக இருந்ததில்லை. இதற்கு காவலர்களும் தேவைப்பட்டதில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். ஒரு முறை மாணவர் ஒருவர் உண்ணாவிரதே போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலாக துணை வேந்தரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். இது தான் ஜெ.என்.யு. கலாச்சாரம். நாங்கள் எங்கள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அவர்களிடம் நாங்கள் முறைகேடாக நடந்து கொள்வதில்லை. ஆனால் ஏதாவது தவறு நடந்தது என்றால் நாங்கள் அவர்களிடம் முறையிடுவோம். தற்போது துணை வேந்தரிடம் முறையிடுகிறோம்.

ஜெ.என்.யு. சம்பவத்திற்கு பிறகு தான் ஆண்டி – நேசனல் என்ற வார்த்தை தலை தூக்கியது. இதையடுத்து மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களது தேச பக்தியை நிருபிக்க முயற்சி செய்கின்றனர். நீங்கள் ஒரு ராணுவ பின்னணியில் இருந்து வந்தவர். இதை விட ஒரு தேச பக்தி இருக்க முடியாது. இது எப்படி உங்களை வடிவமைக்கிறது?

ராணுவ பின்னணி என்னை மிக ஒழுக்கமானவளாக உருவாக்கியிருக்கிறது. மிக சிறப்பான வசதியுடன் தான் வளர்ந்தேன். ராணுவ பள்ளி வளாகமும், ஜெ.என்.யு வளாகத்தை போன்றதே. அதனால் எனது வாழ்வில் இது போன்ற சூழலில் நான் ஏற்கனவே இருந்துள்ளேன். இந்த பின்னணிகளை கொண்டிருப்பதால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உணர்வுடன் தான் நான் வளர்க்கப்பட்டேன். எனது தந்தை மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்டவர். ராணுவம் தான் எங்களுக்கு வீடு கொடுத்தது. இதை போலவே ஏராளமானவர்கள் ஏழ்மையான சூழலில் உள்ளனர். இதன் காரணமாக நான் சமூக விழிப்புணர்வுடன் இருக்கிறேன். இதுவே இடதுசாரி அமைப்பில் என்னை இணையச் செய்தது.உண்மையான பிரச்சனைகள் குறித்து எங்கு பேசுகிறோமே அங்கு தான் அதற்கான மாற்றம் உருவாகும் என்பதை உணர்ந்தேன்.

தேர்தலில் போட்டியிடுவது என்பது சுலபமானது இல்லை ? இதில் போட்டியிடும் முடிவை எடுக்க உங்களுக்கு கடினமானதாக இல்லையா? என்ன முடிவு வரும் என்பது குறித்து நிம்மதியுடன் இருந்தீர்களா அல்லது முடிவு குறித்து மன உலைச்சலுடன் இருந்தீர்களா?

இது கட்சியின் முடிவு. நான் 6 வருடமாக AISA-வில் இருப்பதால் என்னை நிற்க வைக்க முடிவு செய்தார்கள். நான் நிம்மதியாக இல்லை. இப்போது தான் என தோல்களின் மீது அதிக பொறுப்புகள் உள்ளது. இது ஒரு ஆரம்பமே. நாட்டிலும் , பல்கலைக்கழக வளாகத்திலும் சூழ்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. உடனடியாக நாங்கள் செயலில் இறங்க வேண்டும்.

ஜெ.என்.யு தேர்தல் நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியம் என நினைக்கிறீர்களா? இது நாட்டின் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

நாட்டில் இருக்கும் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு இடமே ஜெ.என்.யு பல்கலைக்கழகம். இது தான் பல்கலைக்கழகத்தின் தனித்துவம். இங்கு பல விதமான மாணவர் குழுகள் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிராந்திய செய்தித்தாள்கள் கூட எங்கள் தேர்தல் முடிவுகளை வெளியிடுகின்றன. ஆண்டு ஆண்டு காலமாக , அவசர காலகட்டத்திலும் , இங்கிருக்கும் மாணவர் அமைப்புகள் நாட்டின் அரசியலமைப்புகளுடன் வரலாற்று ரீதியாக ஒத்துப்போகிறது. ஜெ.என்.யு.வில் இடதுசாரி வென்றிருப்பது நாட்டிற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. தில்லி பல்கலைக்கழக தேர்தலில் கூட மாணவர்கள் வலதுசாரிகளை புறக்கணிப்பார்கள் என நம்புகிறோம். ஜெஎன்யு நாடு முழுவதும் மாணவர் இயக்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் இடமாக இருக்கிறது. இங்கேயே நாங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடுகிறோம்.  இதே நிலை நாடுமுழுவரும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம். நாங்கள் நாட்டிற்கு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறோம். ஜெ.என்.யு ஒரு தனி தீவு கிடையாது. நாடு முழுவதும் உள்ள இயக்கங்களுடன் தொடர்பு படுத்திகொண்டிருக்கிறோம். அதன் காரணமாக இங்கு என்ன நடந்தாலும் அது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழில் : ஆர்.சரண்யா

நன்றி : http://www.edexlive.com/live-story/2017/sep/10/exclusive-there-were-arrest-warrants-against-kanhaiya-kumar-im-sure-itll-be-the-same-for-me-gee-1098.html

Leave A Reply