திருப்பூர், செப்.12-
எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலையை மாற்றியமைக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று சிஸ்மா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி திங்கள்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாடு மற்றும் செலவினங்கள் வாரம் ஒரு முறை கூடிக் கொண்டே போகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பைசா கணக்கில் விலையை ஏற்றி, தொடர்ந்து கட்டண உயர்வை அனைவர் மீதும் சுமத்தி வருகின்றன. மாதத்தின் முதல் வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தும், இரண்டாவது வாரத்தில் விலையை உயர்த்தியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஜுன் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65 க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.73 ஐ எட்டியுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு கடந்த ஜுன் மாதத்தில் ரூ.55 க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.61 ஐ எட்டியுள்ளது. இந்த விலை உயர்வால் தொழில் நிறுவனங்களும், பொது மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை இறங்கும் பொழுது விலை குறைப்பை மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல், வரியை அதிகப்படுத்தி விலையை சீராக வைத்துக் கொள்ள மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலையை மாற்றி அறிவிக்கும் திட்டத்தை மாற்றியமைத்து, பழைய நிலைப்பாட்டை அமல்படுத்த வேண்டும்.

வரும் நாட்களில் இதே நிலை நீடிக்கும் என்றால், கட்டன கண்காணிப்பு குழு ஒன்றை மத்திய அரசு நிறுவி, விலையேற்றத்தை ஒரு வாரத்திற்கு முன் மக்கள் அறியும் வகையில், அறிவிப்பு செய்யப்பட வேண்டும். தினசரி விலையேற்றத்தால் தொழில் துறையும், பொது மக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply