கோவை, செப்.12-
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது உரிமை மீட்கும் போராட்டத்தில் எந்த அடக்குமுறைக்கும் அஞ்ச மாட்டோம் என ழுழக்கமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று கூடிய சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக, சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கழுத்தில் மாலையிட்டு சடலம்போல் படுத்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 500 பேரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே புதன்கிழமை ஆட்சியரகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு:
ஈரோடு தாலுகா அலுவலகவளாகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்பாபு, அருள், ஆனந்தகணேஷ் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பி.எஸ்.பார்க் 5 ரோடு சிக்னல் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி:
கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சலீம் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் கு.குமரேசன், ஜாக்டோ ஜியோ சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகபெருமாள், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் நீதிமன்ற நுழைவு வாயிலில் நீதிமன்ற ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க துணை தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

Leave A Reply

%d bloggers like this: