கோவை, செப். 12-
வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும், பத்திரம் கொடுக்காமலும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 1991 மற்றும் 92 ஆம் ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையையும் செலுத்திவிட்டனர். இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தோர் கூடுதல் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மீண்டும் கூடுதல் தொகை கேட்டுள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பயனாளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் ஒரு சென்ட்க்கு ரூ.6 ஆயிரம் கட்டினால் போதும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 1995லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை கேட்டு நிர்பந்தித்து வருகிறது. எனவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திங்களன்று வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply