நாங்க வசிக்கிறது, தமிழ் நாட்டுக்குள்ளே, ஆனா எங்களுக்கு மின்சாரம் கொடுப்பது கேரள சர்க்காரா என கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கூடப்பட்டி என்னும் மலைக்கிராமத்தில் வசிக்கும் இருளர் இன பழங்குடியின மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் அருகே அத்திக்கடவு என்னும் இடத்தில் இருந்து வனத்துறையின் குறுகிய சாலை வழியே பத்து கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் கூடப்பட்டி கிராமம் வருகின்றது.

இந்த  கிராமத்தில் இருளர் இன பழங்குடிகள் 21 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கிராமம் கோவை மாவட்டத்தின், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இக்கிராமத்தின் அருகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஓடி வரும் பவானி நதியும், சிறுவாணி நதியும் ஒன்றாக சங்கமிக்கின்றன. காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கூடப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்களிடம், தமிழகத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு கேரள அரசாங்கம் ஏன் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பினால் தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம் என்ற பதிலே பட்டென வருகின்றது.

மாநில பிரிவினைக்கு பின்னர் கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மின்வாரியமே இக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்கியுள்ளது. பின்னர் கடந்த 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இப்பகுதி மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழக மின்வாரியத்திற்கு இம்மக்கள் வைத்த கோரிக்கை கண்டுகொள்ளபடவேயில்லை என்பதோடு, ஒரு சில மாதங்கள் கழித்து அங்கிருந்த மின்கம்பங்கள் மட்டுமின்றி கூடபட்டி கிராமத்திற்கான மின்மாற்றியினையும் கழற்றி சென்று விட்டனர்.

இதன் பின்னர் தங்களுக்கு மின்சார வசதி மீண்டும் வழங்கப்பட வேண்டும். வனத்தின் நடுவே விலங்குகள் மத்தியில் பாதுக்காப்பின்றி தவிக்கின்றோம், தங்களது குழந்தைகள் படிக்க வழியில்லை என பல பல ஆண்டுகளாக இப்பகுதி இருளர் இன மக்களின் கோரிக்கை தமிழக அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இருபத்தைந்து வருடங்களாக போராடியும், தமிழக மின் வாரியம் கூடபட்டிக்கு மின் இணைப்பை புதுபிக்கவேயில்லை. இதனால், வேறு வழியின்றி மாநில எல்லையை கடந்து அருகில் உள்ள கேரள அரசிடம் கடந்த 2011 ஆம் ஆண்டு தங்களது கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதனையடுத்து ஒரு சில மாதங்களில் கேரள மின்வாரியதால் கூடப்பட்டி கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. வீடுகளுக்கு மின் விளக்குகள் எரியும் வகையில் மின்சாரம் கேரள அரசால் வழங்கப்படும் நிலையில், தங்களின் வாழ்வாதாரமே சிறு விவசாயம் தான் என்பதால் செட்டில்மெண்ட் பகுதியில் விவசாயம் செய்யவும் மின்சாரம் வழங்கி உதவுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கும் ஒப்புப்கொண்ட கேரள அரசு, விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க தமிழகத்தின் வனத்துறை மற்றும் மின்சார வாரியம் ஆகியவை ஒப்புதல் தந்து என்.ஓ.சி. சான்று வழங்கினால் மின்சாரம் தரத்தயார் என கூறிவிட்டது.

ஆனால், அதற்கும் ஒப்புதல் தராமல் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை கூறி வருகிறது கோவை மாவட்ட நிர்வாகம் என தெரிவிக்கும் இருளர் இன மக்கள், சரி நீங்களாவது விவசாய தேவைக்கு மின்சாரம் தாருங்கள் என்றாலும் தர மறுப்பதாக வேதனைப்படுகின்றனர். இது மட்டுமில்லாமல் தங்களின் குடியிருப்பிற்கு பட்டாவோ, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரோ, உரிய பேருந்து வசதியோ இதுவரை செய்து தரப்படவில்லை. தங்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை மூலம் ரேசன் பொருட்கள் வாங்க காட்டுப் பாதையில் சுமார் 28 கிலோமீட்டர் பயணித்து மலையடிவாரத்தில் உள்ள வெள்ளியங்காடு செல்ல வேண்டும். மேலும், வெள்ளியங்காடு பஞ்சாயத்து நிர்வாகத்தால் வழங்கப்படும் நூறு நாள் வேலை திட்டப்பணி கூட பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை என்கின்றனர்.

இதற்கிடையே, ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் தங்கள் கிராமம் அமைந்துள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் காரணமாக சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெரு விளக்குகளை கோவை மாவட்ட போலீசார் அமைத்தனர். ஆனால் சில நாட்களிலேயே அதுவும் பழுதாகி பலனற்றுகிடக்கிறது. இதேபோல், பல ஆண்டு
களாக போராடி தங்களுக்கென தமிழக அரசால் கட்டி தரப்படும் வீடுகளுக்கான பணி 80 சதம் முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தற்போது நிலவும் அரசியல் சூழலால் இப்பணியும் நிறுத்தப்பட்டு பல மாதங்களாகிறது என கண்ணீர் சிந்துகின்றனர். கூடப்பட்டி கிராம மக்களின் கோரிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் விவசாயம் செய்ய வனத்துறை சார்பில் ஐந்து ஆயில் எஞ்சின்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு டீசல் வாங்க வசதியில்லாமல் மின் இணைப்பு கேட்கின்றனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றனர்.

தமிழக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடப்பட்டி கிராமத்திற்கு மின்சார வசதி செய்து தர சில சிரமங்கள் உள்ளதாகவும், விரைவில் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம், கேட்டவுடன் மின் இணைப்பு என்றெல்லாம் அரசு சார்பில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், இந்த கூடப்பட்டி கிராம இருளர் இன மக்களின் இன்னலை போக்கவும் நடவடிக்கை எடுத்தால் நல்லது. இருளர் இன மக்களை சூழ்ந்துள்ள இருளை போக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

– இரா.சரவணபாபு,
மேட்டுப்பாளையம்.

Leave A Reply