புதுதில்லி;
நாட்டில், 7 மக்களவை உறுப்பினர்கள், 98 சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு, அவர்களின் வருமானத்தைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்.பி., எல்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு, அவர்களின் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து கொண்டே போவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையையொட்டி, எம்.பி., எம்எல்ஏ-க்களின் சொத்து குவிப்பு தொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம், பிரமாணப் பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பானது, அவர்களின் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை விட தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை எம்.பி.க்கள் 26 பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்றாலும், அதிலும் குறிப்பாக 7 பேரின் சொத்து பலமடங்கு உயர்ந்துள்ளது என்றும் வரிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல 257 எம்எல்ஏ-க்களில் குறிப்பாக 98 எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பில் அதிபயங்கரமான உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள விசாரணை விவரங்கள் மட்டுமே தற்போது உச்ச நீதிமன்றத்தில் பகிரப்பட்டு உள்ளதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த எம்.பி., எம்எல்ஏ-க்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: