விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான விண்ணப்பங்களை பெறலாம் எனவும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக, கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு இரு அரசாணைகளை பிறப்பித்தது. இந்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மேனன், ‘‘2007க்கு பின் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எதுவும் அரசாணையில்  தெரிவிக்கப்படவில்லை.

விதிமீறல் கட்டடங்களை தொடர்ச்சியாக வரன்முறை செய்தால், மக்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டுவதையே ஊக்குவிக்கும். அதனால், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய தடை விதிக்க வேண்டும்.  இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விதிமீறல் கட்டடங்களை அளந்து, அடையாளம் கண்டு வரன்முறைப்படுத்த உயர்மட்ட பன்னோக்கு சிறப்பு படையை அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரினார்.

இதையடுத்து மனுவுக்கு அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அதுவரை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை பெறலாம் எனவும், அதன் மீது நீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply