அலகாபாத்,
ராம் ரஹீம், ராம்பால், ஆசாராம் உட்பட 14 போலி சாமியார்களின் பட்டியலை அகில பாரத ஆகாரா பரிஷத் என்னும் இந்து மடங்களின் கூட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில பாரதீய ஆகாரா பரிஷத் என்பது இந்து மடங்களின் கூட்டு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு கி பி 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரின் ஆன்மீக வழித்தடத்தை ஒட்டி நிறுவப்பட்டது.  இது இந்து தர்மத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் தெய்வீக துறவிகளின் கட்டளைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.  இதன் தலைவர் நரேந்திர கிரி போலி சாமியார்களின்  பட்டியலை நேற்று அலகாபாத் நகரில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த ராம் ரஹீம் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். மேலும் பாலியல் வழக்கில் ஆசாராம் பாபுவும் கைதிதாகி உள்ளார். அவரது மகன் நாராயண் சிங் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார் .
பரிஷத் வெளியிட்ட பட்டியலில் 14 சாமியார்களின் பெயர்கள் உள்ளன.
1.   ஆசாராம் பாபு (அசுமல் சிருமலானி)
2.   சுக்பிந்தர் கவுர் (ராதே மா)
3.   சச்சிதானந்த் கிரி (சச்சின் தத்தா)
4.   தேரா தத்தா ராம் ரஹிம்
5.   ஓம் பாபா (விவேகானந்த் ஜா)
6.   நிர்மல் பாபா (நிர்மல்ஜீத் சிங்)
7.   இச்சாதாரி பீமானந்த் (சிவமூர்த்தி திவேதி)
8.   சுவாமி அசிமானந்த்
9.   ஓம் நமசிவாய பாபா
10. நாராயண் சாய் (ஆசாராம் பாபு மகன்)
11. ராம்பால்
12. ஆசார்ய குஷ்முனி
13. பிரகஸ்பதி கிரி
14. மல்கான் சிங்
ஆகியோரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது குறித்து நரேந்திரகிரி கூறியதாவது, “நாங்கள் இதை பல மடங்கள் மற்றும் மடாதிபதிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்பே இந்த பட்டியலை வெளியிட்டுள்ளோம்.   தங்களை கடவுள் என சொல்லிக் கொள்ளும் இவர்கள் உண்மையில் போலி சாமியார்கள்.   இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த பட்டியல் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இவர்கள் மேல் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.  எனக்கு இந்த பட்டியலை வெளியிட்டால் கொலை செய்வோம் என ஒரு மிரட்டல் வந்துள்ளது.  இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்.
இந்த பட்டியல் முதல் பட்டியல் ஆகும் தீபாவளி முடிந்த பின் அடுத்த பட்டியல் வெளியாகும்.  அதில் மேலும் 28 போலி சாமியார்களின் பெயர் இருக்கும்.  தங்களை தாங்களே கடவுள் எனவும் கடவுளின் தூதர் எனவும் சொல்லிக் கொள்பவர்கள் நிச்சயம் போலியாகவே இருப்பார்கள்.  மக்கள் இதை மனதில் கொண்டு இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

Leave A Reply