மெக்சிகோசிட்டி,
மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஐ தாண்டி உள்ளது.
மெக்சிக்கோ நாட்டில் தென்கடலோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.1 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின. தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக, ஓக்ஸாக்கா மாகாணத்தின் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.

கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் மெக்சிக்கோவில் இப்படி ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை. நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டதால் மெக்சிகோ சிட்டி, சியாபாஸ், ஹிடால்கோ, வெராகுரூஸ், குயர்ரெரோ, டபாஸ்கோ, ஓக்சாகா, பியூப்லா, டிலாக்ஸ்கலா பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இதையடுத்து நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஐ தாண்டி உள்ளது.
நிலநடுக்கம் பாதிப்பால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் சிதிலங்களை அகற்றும் பணிகளும், பழுதடைந்த சாலைகளை சீர்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply