ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி ஒன்றில் சீருடை அல்லாமல் வேறு உடையில் வந்த மாணவியை உடற்கல்வி ஆசிரியர் ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் மாணவியை வேறு உடையில் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவியின் டைரியிலும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட உடற்கல்வி ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.

இது குறித்து மாணவி, நான் கழிவறையில் நிற்கும் போது அனைத்து மாணவர்களும் என்னைப்பார்த்து சிரித்தனர். எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அந்த பள்ளிக்கு மீண்டும் நான் செல்லமாட்டேன் என அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: