பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதில் சட்டம் தன் கடமையைச் செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தினார். சமூக மாற்றங்களுக்காக அச்சமின்றித் துணிவோடு எழுதுவோரும் பேசுவோரும் செயல்படுவோரும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

கவுரி லங்கேஷ் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. அதில் நிறைவுரையாற்றிய வீரமணி, “கொள்கைக்காக சாவு வந்தால் அதுவே பெருமை. கவுரிகளும் லங்கேஷ்களும் அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்காக என்றென்றும் வாழ்வார்கள்,” என்றார்.

குடிமக்களின் உரிமைகள் பற்றிக் குறிப்பிடுகிற அரசமைப்பு சாசனம், அடிப்படைக் கடமைகள் பற்றியும் கூறுகிறது. அவற்றில் ஒன்றுதான் அறிவியல்பூர்வ சமுதாயத்தைக் கட்டுவது. பகுத்தறிவை வளர்ப்பதுதான் அறிவியல்வூர்வ கடமை. அந்தக் கடமையைத்தான் செய்தார் கவுரி. இதைப் பகுத்தறிவாளர்களும் முற்போக்காளர்களுமன்றி வேறு யாரும் செய்வதில்லை என்றார் அவர். பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவது மக்களைப் புண்படுத்த அல்ல, பக்குவப்படுத்தவே என்று பெரியார் சொன்னதை அவர் நினைவுகூர்ந்தார்.

கவுரி படத்தைத் திறந்துவைத்துப் பேசிய ‘தி இந்து’ குழுமம் தலைவர் என். ராம், “கண்டனக் குரல் போதுமான அளவுக்கு எழுந்துள்ளதாகக் கூற முடியாது. நாம் தொடர்ச்சியாக இப்பிரச்சனையைக் கையில் எடுக்காவிட்டால் சில நாட்களில், கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் மறக்கப்பட்டுவிடும்,” என்றார்.

சில முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்தோர் செய்வதை பயங்கரவாதம் என்று சித்தரிக்கிற ஊடகங்கள், இந்து மதம் சார்ந்த குழுக்களைச் சேர்ந்தோரின் செயல்களை அப்படிக் குறிப்பிடுவதில்லை என்று அவர் விமர்சித்தார். ஊடகவியலாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகத் தாக்கப்படுவதில், வெட்கப்பட வேண்டிய 13 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியதல்ல என்றார் அவர்.

முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்படுவது தீர்வல்ல. கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கிற, அதைப் பாதுகாக்க உறுதியேற்கிற அரசு. அச்சமற்ற நேர்மையான ஊடகவியல் என்ற அரசியலே தீர்வு என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் முனைவர் மு.நாகநாதன், “1850களில் கலவரம் மூட்டப்ட்டது, 1948ல் காந்தி படுகொலை செய்யப்பட்டது, அம்பேத்கர் அமைச்சராக இருந்தபோதே அவமதிக்கப்பட்டது ஆகிய அனைத்திலும் இருப்பது மதவாதம்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் துப்பாக்கி முனையில் அடிமைப்படுத்தியது போல, இன்று பகுத்தறிவாளர்களைத் துப்பாக்கி முனையில் ஒடுக்க முயல்கிறார்கள். மனிதநேயத்திற்கு எதிராக யார் வந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார்.
‘நக்கீரன்’ ஆசிரியர் நக்கீரன் கோபால், “வனவாழ் மக்களுக்கு எதிராக கர்நாடக மாநில வனத்துறையினர் செய்த அட்டூழியங்களைப் பக்கம் பக்கமாக எழுதியவர் கவுரியின் தந்தை லங்கேஷ். இப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாகிய கவுரி கொலையைக் கண்டித்து இங்கேயும் நாடு முழுவதும் குரல்கள் எழுவது நம்பிக்கை தருகிறது. நீட் தேர்வு பிரச்சனையில் இளம் பிள்ளைகள் மனங்களில் ஏற்பட்டிருக்கிற கோபம், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பதை உறுதிப்படுத்தும்,” என்றார்.

‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியர் இந்திரஜித் பேசுகையில், “விவாதங்களில் வெல்ல முடியாதபோது அழித்தொழிப்பில் மதவெறியர்கள் ஈடுபடுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தில் இது நியாயப்படுத்தப்படுமானால் கட்டுப்படுத்த முடியாத வன்முறைக் களமாக மாறிவிடும். அறிவியல்பூர்வமாக இருப்போருக்கும் அப்படி இருக்க மறுப்போருக்குமான முரண்பாடுகள் தொடர்கின்றன,” என்று கூறினார்.

‘தீக்கதிர்’ சென்னைப் பதிப்பு பொறுப்பாசிரியர் அ. குமரேசன், “கருத்துப் பரப்புரை செய்கிறவராக மட்டும் இல்லாமல் களப்போராளியாகவும் இருந்தார் என்பதால்தான் கவுரி லங்கேஷ் படுகொலை நடந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமை மட்டுமல்ல. யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவும் எது சரியென ஆராய்ந்து முடிவு செய்யவும் மக்களுக்கு உள்ள கருத்தறியும் உரிமையுமாகும்,” என்றார்.

தி.க. துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். பரப்புரைப் பொறுப்பாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: