வாஷிங்டன்;
பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு; மத்திய அரசு இதில் தலையிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முனைவர் ஏ.கே. ராசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு, தொலைபேசி வழி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நீதிபதி ஏ.கே. ராசன் கலந்து கொண்டு ‘நீட் தேர்வும் மாநில உரிமைகள் பறிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் சேர்க்கை குறித்தான முடிவுகளை மாநில அரசே எடுக்க முடியும். இதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை. மத்திய அரசு அப்படி தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இந்திய மருத்துவக் கழகத்திற்கு, மருத்துவர்களின் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்தான அதிகாரத்தை மத்திய அரசு 1993-ஆம் ஆண்டு வழங்கியது. இதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

இந்த அதிகாரம் வழங்கப்பட்ட சட்டத்தை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவும் இல்லை. வழக்குப் போடவும் இல்லை. ஆக, மருத்துவக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள, மாணவர் சேர்க்கைக்கான அதிகாரத்தையே, அரசியல் சாசன சட்டப்படி திரும்பப் பெற முடியும். அப்படி பெறும் பட்சத்தில் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளை அகில இந்திய மருத்துவக் கழகமானது, இந்தியாவின் எந்த பல்கலைக் கழகத்தின் மீதும் திணிக்க முடியாது.

‘நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு இயற்றிய சட்டம்’ செல்லும் என்றும்; இது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்றும், உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கூடுதல் மனுதாரர்கள் இணைந்து, அரசியல் சாசன சட்டப்படி, மருத்துவக் கல்லூரி சேர்க்கை பற்றிய உரிமை மாநில அரசுக்குரியது என்று வாதிட்டு வெற்றி பெறமுடியும்.

2016-ஆம் ஆண்டு சங்கல்ப் அறக்கட்டளை, நீட் தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என்று நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுதாரராக வழக்கு தொடர்வதற்கு, சங்கல்ப் அமைப்பிற்கு நேரடியான பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதிர்த்து வாதாடியவர்கள் அந்த கோணத்தை கவனத்தில் கொண்டு வாதாடவில்லை. வழக்கு தொடர்வதற்கே சங்கல்ப் அமைப்பிற்கு முகாந்திரம் இல்லாத போது, அது தள்ளுபடியும் செய்யப்பட்டிருக்கும்.

தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கிலும் கூட, பலரும் மனுதாரராக இணைந்து அரசியல் சாசன சட்ட வல்லுநர்களாக உள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினால், மாநில உரிமையை மீட்க முடியும்.

நீட்டிற்கான சட்டத்தை, மத்திய அரசையே திரும்பப் பெறச் செய்வதன் மூலமும் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். அதற்கு மாநில அரசு, தமிழக எம்பிக்கள், அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து அரசியல் ரீதியான தீர்வும் பெறலாம்.
இவ்வாறு நீதிபதி ஏ.கே. ராசன் கூறியுள்ளார்.

Leave A Reply