திருப்பூர், செப்.11 –
திருப்பூரில் மரணச் சாலைகளாக திகழும் எல்லா சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் ஈட்டித்தரும் திருப்பூர் மாநகரில் ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இந்த நகரில் இருக்கும் சாலைகள் வேறெந்த நகரிலும் இல்லாத அளவுக்குப் படுமோசமாக குண்டும், குழியுமாக சீர்குலைந்து காணப்படுகின்றன. பிரதானமாக அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் பெருமாநல்லூர் சாலை ஆகியவை படுமோசமாக சீர்குலைந்து தினமும் விபத்து நடைபெறுவதுடன், சில இடங்களில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறும் பாலம் பணி காரணமாக போக்குவரத்து நெருக்கடி, பயணிகள் அலைக்கழிப்பு என பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவிக்கின்றனர். அணைப்பாளையம் பாலம், டிஎம்எப் ஊத்துக்குளி சாலை பாலம், அணைக்காடு பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதுடன், சில பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. போக்குவரத்து நெருக்கடி, பொதுமக்களுக்கு பல்வேறு வித இன்னல்கள், உயிரிழப்பு விபத்துகள் நிகழ்ந்தாலும் அரசு நிர்வாகம் இவற்றைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மேற்படி சாலைப் பணிகளையும், பாலங்கள் கட்டுமானப் பணியையும் குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்கவும், மோசமாக இருக்கும் குண்டு, குழிகளை உடனடியாக செப்பனிடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்களன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர்கள் எம்.ராஜகோபால் (தெற்கு), பி.முருகேசன் (வடக்கு), கே.ரங்கராஜ் (வேலம்பாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் சி.மூர்த்தி (தெற்கு), கே.பழனிசாமி (வடக்கு) மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து சாலைகளை சீர்செய்ய வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர்கள் பழனியப்பன் (வடக்கு), ராஜேஷ்கண்ணா (தெற்கு) ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை செப்பனிடும் பணியை ஒரு வார காலத்தில் சீரமைப்பது என்றும், தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள அவிநாசி – திருப்பூர் – தாராபுரம் சாலை சீரமைப்பு குறித்து கோவையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிடவும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று செப்பனிடவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளரிடமும் தொலைபேசியில் பேசி கோரிக்கையை வலியுறுத்தினர். அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கும் மனு அளிக்கப்பட்டது. சாலைகளைச் செப்பனிட்டு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: