கோவை, செப். 11-
போராளிகளை கைது செய்வதால் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்கிற தமிழக அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இறுதி வெற்றி கிட்டும் வரை மாணவர்களின் போராட்டம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவடையும் என்பதை காலம் உணர்த்தும் என வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா தெரிவித்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை கிழக்கு நகரக்குழுவிற்குட்பட்ட அண்ணாபுதுலைன் கிளையின் சார்பில் போதை, ஊழல், பாலியல் வன்முறை எதிர்ப்பு மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சுதந்திர தினம் மற்றும் ஓணம் விழா நடைபெற்றது. சிவானந்தகாலனி புதுப்பாலம் அருகில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த ஒருமாதமாக நடைபெற்ற கிரிக்கெட், வாலிபால், கபடி மற்றும் கோலப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சீலாராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அண்ணாபுதுலைன் கிளை செயலாளர் டி.தினேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கேரளா மாநில நெம்மார சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு மற்றும் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வீரர்களுக்கு பரிசளித்து கௌரவித்தனர்.

இதைத்தொடர்ந்து நெம்மாரா சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு வாழ்த்தி பேசுகையில், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்று பெயர் தெரிந்தும், தெரியாமலும் லட்சக்கணக்கான தியாகிகளின் உயிர்த்தியாகத்தால் நமது தேசம் விடுதலை பெற்றது. அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளும், வாலிபர் சங்கத்தினரும். ஆனால், இந்திய விடுதலை போராட்டத்தில் எந்த பங்கையும் வகிக்காமல், அந்நிய பிரிட்டிசாருக்கு அடிமையாய், சேவகனாய் விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த கூட்டம் இன்று தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறது. விடுதலைக்காக சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் தனித்தனியான முத்துக்களை கோர்த்து மணிமாலையைப்போல ஒன்றுபட்டு போராடினார்கள் நமது முன்னோர்கள். அத்தகைய ஒற்றுமையை தனது பதவி சுகத்திற்காக பிரித்தாலும் சூழ்ச்சியை மோடி வகையராக்கள் செய்து வருகின்றனர்.

அத்தகைய சூழ்ச்சியை வாலிபர் சங்கம் முறியடிக்கும். வரலாற்றை மாற்றத்துடிக்கும் கயவர்களிடம் இருந்து இந்த தேசத்தை பாதுகாக்கும் பணியில் போராடும் வாலிபர் சங்கத்திற்கு அனைத்து பகுதி இளைஞர்களும் துணை நிற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா பேசுகையில், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கட்டாயம் விலக்கு கிடைக்கும் என தமிழக அரசு உறுதியளித்தது. மத்திய அமைச்சர்களும் ஓராண்டுக்கு விலக்கு தருவோம், சட்டம் போடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்தது. ஆனால், ஆட்சியாளர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் நம்பவைத்து கழுத்தறுத்தனர். இதன்விளைவாக மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் போராட்ட களமாய் மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலையில் இறங்கிவிட்டார்கள்.

அதேநேரம், நம்பிக்கை துரோகம் செய்து கழுத்தறுத்த மத்திய, மாநில அரசுகள், அனிதாவை இழந்து கதறுகிற மாணவர்களை காவல்துறையை கொண்டு அடக்க முயற்சிக்கிறது. கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசு, மாணவர் சங்க தலைவர்களை கைது செய்கிறது. போராளிகளை கைது செய்வதால் போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை தமிழக மாணவர்களின் போராட்டம் ஒருபோதும் ஓயாது. அடுத்து கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் வாலிபர் சங்கத்தினரும், அணி அணியாய் திரள்வார்கள். அடக்குமுறைக்கு அஞ்சியவர்கள் அல்ல என்பதை தமிழக அரசிற்கு நாங்கள் நிருபிப்போம் என எஸ்.பாலா ஆவேசமாக கூறினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், இளம் சாதனையாளர்களும் பாராட்டப்பட்டனர்.

இதேபோல், கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம் செய்த வாலிபர் சங்க முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிந்து அவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்ச்சிகளில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், என்.செல்வராஜ் மற்றும் பேராசிரியர் மார்டின் மதிவண்ணன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் செந்தில்குமார், கே.சிவசாமி, டி.எ.சலீம், எம்.ஜி.ஜே.ராஜ்குமார், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் துரைசங்கர், எம்.சிவா, எம்.செந்தில், மாரிமுத்து பிகே.காமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக, கோவை பிரியாவின் பரதநாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave A Reply