கோவை, செப். 11 –

போராளிகளை கைது செய்தால் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்கிற தமிழக அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இறுதி வெற்றி கிட்டும்வரை மாணவர்களின் போராட்டம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவடையும் என்பதை காலம் உணர்த்தும் என வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா கோவையில் ஆவேச உரையாற்றினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை கிழக்கு நகரக்குழுவிற்குட்பட்ட அண்ணா புதுலைன் கிளையின் சார்பில் போதை, ஊழல், பாலியல் வன்முறை இல்லாத மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சுதந்திர தினம் மற்றும் ஓணம் விழா நடைபெற்றது. சிவானந்தகாலனி புதுப்பாலம் அருகில் ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்வில் கடந்த ஒருமாதமாக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட், வாலிபால், கபடி மற்றும் ஓணம் கோலப்போட்டி போன்றவற்றில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சீலாராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அண்ணாபுதுலைன் கிளை செயலாளர் டி.தினேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கட்சியின் கேரளமாநில நெம்மார சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு மற்றும் வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா பங்கேற்று வீரர்களுக்கு பரிசளித்து கௌரவித்தனர்.

நிகழ்வில் பங்கேற்று நெம்மாரா சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு வாழ்த்தி பேசுகையில், ஏழை எளிய மக்களின் நலனை புறந்தள்ளி கார்ப்ரேட்டுகளின் நலனுக்காய் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 15 அன்று டில்லியில் சுதந்திரதின கொடியை ஏற்றி உரையாற்றியதை அனைவரும் கண்டோம். பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்று பெயர் தெரிந்தும், தெரியாமலும் லட்சக்கணக்கான தியாகிகளின் உயிர்த்தியாகத்தால் பெற்றது நமது இந்திய விடுதலை. அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளும், வாலிபர் சங்கத்தினரும். இந்திய விடுதலைக்கு போராடி தியாகம் செய்த தியாகிகளின் வாரிசுளான வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் வேலை வேண்டும் என்கிற முழக்கத்தோடும், உழைப்பவனுக்கு நியாயமான கூலி கேட்டு சிஐடியு, அனைவருக்கும் கல்வி கேட்டு மாணவர் சங்கம் என எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய விடுதலைபோராட்டத்தில் எந்த பங்கையும் வகிக்காமல், அந்நிய பிரிட்டீஸ்காரர்களுக்கு அடிமையாய், சேவகனாய் விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த கூட்டம் இன்று தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறது. சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல், தனித்தனியான முத்துக்களை கோர்த்து மணிமாலையைப்போல ஒன்றுபட்டு போராடினார்கள் நமது முன்னோர்கள் விடுதலைக்காக. அத்தகைய ஒற்றுமையை தனது பதவி சுகத்திற்காக பிரித்தாலும் சூழ்ச்சியை மோடி வகையறாக்கள் செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சியை வாலிபர் சங்கம் முறியடிக்கும். வரலாற்றை மாற்றத்துடிக்கும் கயவர்களிடம் இருந்து இந்த தேசத்தை பாதுகாக்கும் பணியில் போராடும் வாலிபர் சங்கத்திற்கு அனைத்து பகுதி இளைஞர்களும் துணை நிற்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று நிறைவு செய்தார்.

முன்னதாக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா பேசுகையில், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கட்டாயம் விலக்கு கிடைக்கும் என தமிழக அரசு உறுதியளித்தது. மத்திய அமைச்சர்களும் ஓராண்டுக்கு விலக்கு தருவோம் சட்டம் போடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்தது. ஆட்சியாளர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் நம்பவைத்து கழுத்தறுத்தனர். இதன்விளைவாக மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் போராட்ட களமாய் மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலையில் இறங்கிவிட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்து கழுத்தறுத்த மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடால் அனிதாவை இழந்து கதறுகிற மாணவர்களின் கதறல்களை காவல்துறையை கொண்டு அடக்க முயற்சிக்கிறது தமிழக அரசு. கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசு மாணவர் சங்க தலைவர்களை கைதுசெய்கிறது. போராளிகளை கைதுசெய்வதால் போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை தமிழக மாணவர்களின் போராட்டம் ஒருபோதும் ஓயாது. அடுத்து கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் வாலிபர் சங்கத்தினரும் அணிஅணியாய் திரள்வார்கள். அடக்குமுறைக்கு அஞ்சியவர்கள் அல்ல என்பதை தமிழக அரசிற்கு நாங்கள் நிருபிப்போம் என எஸ்.பாலா ஆவேச உரையாற்றினார். நிறைவாக இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், இளம் சாதனையாளர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

இதேபோல, கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உடலை தானம் செய்த வாலிபர் சங்க முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிந்து அவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து வாலிபர் சங்கம் நடத்தி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது..

இந்நிகழ்ச்சிகளில்  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், என்.செல்வராஜ் மற்றும் பேராசிரியர் மார்டின் மதிவண்ணன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் செந்தில்குமார், கே.சிவசாமி, டி.எ.சலீம் மற்றும் எம்.ஜி.ஜே.ராஜ்குமார் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி துரைசங்கர், கிழக்கு நகர தலைவர் எம்.சிவா, எம்.செந்தில், மாரிமுத்து பிகே.காமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக நிகழ்ச்சியில் கோவை பிரியாவின் பரதநாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொம்மலாட்ட உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

Leave A Reply

%d bloggers like this: