இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் அதுவரை 1.1.2016 முதல் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஆகஸ்ட் 22ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

12.09.2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும், அதற்கும் மாநில அரசு செவி சாய்க்கவில்லை என்றால் 13.09.2017 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய மாநில அரசு, அக்கோரிக்கைகளை ஏற்காமல் காலம் தாழ்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. சாதாரண மக்களும், மாணவர்களும் பாதிப்படையாத வகையில் தமிழக அரசு உடனடியாக போராடும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் திங்களன்று (செப். 11) எழிலகம் முன்பு ஆயிரக்கணக்கான போராடும் ஊழியர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் – தமிழ்நாடு சார்பாக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வாழ்த்தி உரையாற்றினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: